Last Updated : 26 Aug, 2017 01:02 PM

 

Published : 26 Aug 2017 01:02 PM
Last Updated : 26 Aug 2017 01:02 PM

கலவரச்சூழலை அறிந்தும் தடுக்காத ஹரியாணா முதல்வர்: உள்துறை அமைச்சகத்திடம் உளவுத்துறை அறிக்கை

பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தீர்ப்புக்குப் பின் கலவரம் வரும் என அறிந்தும் அதை தடுக்க ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் முயலவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதாவின் மடாதிபதியான குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இதனால் ஹரியாணாவில் 29 பேர் மற்றும் பஞ்சாபில் 2 பேர் பலியாகி உள்ளனர். இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 60 பாதுகாப்பு படையினர் உட்பட 360 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதனால் ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று அமலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, 144 தடை உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தம் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஹரியாணாவாசிகள் தம் அன்றாடப் பணிக்குச் செல்லாமல் தம் வீடுகளில் அடைந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹரியானாவின் பஞ்ச்குலா, சிர்சா மற்றும் பண்டிண்டாவில் மயான அமைதி நிலவுகிறது. இந்நிலைக்கு பாஜக முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் அரசே முழுக்காரணம் என பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். நன்கு படித்தவர்கள் வாழும் நகரம் எனப்பெயர் எடுத்த பஞ்ச்குலாவில் இதுபோன்ற கலவரம் ஏற்பட்டதில்லை எனக் கருதப்படுகிறது.

இது குறித்து 'தி இந்து'விடம் மத்திய உளவுத்துறை வட்டாரம் கூறுகையில், 'மூன்று நாட்களுக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடும்படி ஹரியானா அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். தீர்ப்பன்று கூட்டம் சேர அனுமதிக்காதீர்கள் என்பதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. கலவரச்சூழலை அறிந்தும் ஹரியாணா அரசு தடுக்காமல் இருந்தது தான் உயிர் பலிகளுக்கு காரணம்' எனத் தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானாவில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறினார். இவர் ஹரியாணாவின் முதல்வர் கட்டார் அரசை காக்கும் வகையில் கூறினாலும் அவரது உள்துறை

செயலாளரான ராஜீவ் மெஹரிஷியின் கருத்து வேறாக இருந்தது. ராஜ்நாத் பேசிய பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மெஹரிஷ், ஹரியாணாவில் பதட்டநிலை நீடிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு மட்டுமா?

இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா, ஹரியாணா அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மிளகாய் குண்டுகள்? மிளகு கையெறி குண்டுகள்? இவை அனைத்தையும் பாதுகாப்பு படைகள், போராடும் காஷ்மீரிகளைத் தடுக்க மட்டும்தான் பயன்படுத்துமா?' என கேள்விகள் எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் போராட்டக்காரர்களிடம் இருந்து தப்ப பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய மனிதகேடயம் முறையையும் குறிப்பிட்டு அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இதில் ஒமர், 'பஞ்ச்குலாவில் மனித கேடயம் பயன்படுத்தாதது ஏன்? பல்வேறு ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தமுறை சமீபத்தில் பயன்படுத்தப்பட்டதே?' எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு காரணமான முதலமைச்சர் கட்டாரை, பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஒமர் வலியுறுத்தியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் ஹரியானாவில் ஒதுக்கீடு கேட்டு ஜாட் சமூகத்தினர் போராட்டம் நடத்தி இருந்தனர். அதில் கலவரம் வெடித்து சுமார் 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x