Last Updated : 31 Aug, 2017 09:21 AM

 

Published : 31 Aug 2017 09:21 AM
Last Updated : 31 Aug 2017 09:21 AM

பக்ரீத் நாளில் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்: இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மையினர் பிரிவு கோரிக்கை

பக்ரீத் பண்டிகை நாளில் இஸ்லாமியர்கள் பிராணிகள் பலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் (முஸ்லிம் தேசிய அமைப்பு) கோரிக்கை விடுத்துள்ளது.

பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டு வரும் சனிக்கிழமை (செப். 2) வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்பண்டிகையில் அல்லாவின் பெயரால் முஸ்லிம்கள் ஆடு, எருமை மற்றும் ஒட்டகங்களை பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை இஸ்லாமியர்கள் தவிர்க்க வேண்டும் என உ.பி.யில் முஸ்லிம் தேசிய அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் அமைப்பாளர் சையது ஹசன் கவுசர் கூறும்போது, “முத்தலாக் வழக்கத்தை போல பக்ரீத் நாளில் பலி கொடுப்பதும் தவறான வழக்கம். சவுதி அரேபியாவில் ஹஜ் எனும் புனித யாத்திரை செல்பவர்கள் மட்டும் அங்கு பலி கொடுக்கும் வழக்கம் கொண்டுள்ளனர். இந்த வழக்கம் பொதுவான இஸ்லாமியர்கள் மற்ற இடங்களில் மேற்கொண்டதாக முன்னுதாரணங்கள் இல்லை. இது பக்ரீத் பண்டிகையில் மேற்கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது. இந்த நல்ல நாளில் இஸ்லாமியர்கள் எதையாவது பலி கொடுக்க விரும்பினால் அவர்கள் தங்களின் தீய பழக்கங்கள் மற்றும் குறைகளை பலி கொடுக்க வேண்டும். கர்பாலாவில் இமாம் உசைன் பலி கொடுத்தது போல் இஸ்லாமியர்களும் அதை செய்ய வேண்டும் என தவறாக வழிநடத்தப்படுகிறது. இது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை முஸ்லிம்கள் அறியாமல் உள்ளனர்” என்றார்.

இந்தப் பிரச்சினையை அயோத்தி பிரச்சினையுடன் இணைத்து கவுசர் பேசியுள்ளார். பிரச்சினைக்குரிய இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என குர்-ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும் இதனால் அயோத்தியில் பாபர் மசூதியை எப்படி கட்ட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பக்ரீத் பண்டிகைக்கு பலி கொடுப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முஸ்லிம் தேசிய அமைப்பினர் ஒரு மாதம் முன்பு தொடங்கினர். குறிப்பாக உ.பி., பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் இப்பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் முஸ்லிம் உலாமாக்களுடன் கூட்டம் நடத்தி பசுக்களை பலி கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது எனப் பிரச்சாரம் செய்தனர். ‘பசுவில் பால் ஒரு மருந்து’ என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளதாகக் கூறினர். இந்த பிரச்சாரத்திற்கு உ.பி.யில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சன்னி மறையியல் துறை பேராசிரியர் முப்தி ஜாஹீத் அலி கான் கூறும்போது, “முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவது ஆர்எஸ்எஸ் வழக்கமாக உள்ளது. தங்களுடன் முஸ்லிம்கள் சிலரை சேர்த்துக்கொண்டு தவறாகப் பேச வைக்கின்றனர். பக்ரீத் நாளில் குர்பானி (பலி) கொடுக்கக் கூடாது என்பது மிகவும் தவறான கருத்து ஆகும். இது அசரத் சையத் இப்ராகீம் காலம் முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் பலி கொடுப்பதற்கு முன் அந்த பிராணியை எப்படி அன்பு செலுத்தி வளர்க்க வேண்டும் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், நம் அன்புக்குரியதை அல்லாவுக்கு அர்ப்பணிக்கிறோம். ஆர்எஸ்எஸ் கூறுவதை இஸ்லாமியர்கள் எவரும் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x