Last Updated : 24 Aug, 2017 06:27 PM

 

Published : 24 Aug 2017 06:27 PM
Last Updated : 24 Aug 2017 06:27 PM

குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: கோரக்பூர் மருத்துவமனைக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைக்கு யோகி உத்தரவு

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரத்தில், மருத்துவமனை மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிஆர்டி மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனமான, புஷ்பா விற்பனையகம் ஆகியவை மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆக்ஸிஜன் வழங்கும் பொறுப்பு மருத்துவர் மற்றும் மயக்க மருந்து வார்டின் தலைவரான சதீஷ், டாக்டர் கபீல் கான் மீதும் கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோரக்பூர் விபத்து பின்னணி

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 5 நாட்களில் 60 குழந்தைகள் இறந்தன. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமை செயலர் ராஜீவ் குமார், தனது அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் கூடுதல் தலைமை செயலர் அனிதா பட்நாகர் ஜெயின் (மருத்துவம்) உட்பட 6 உயரதிகாரிகளின் அலட்சியத்தால் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்துள்ளன என்று ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கூடுதல் தலைமை செயலர் அனிதா அந்தப் பொறுப்பில் இருந்து நேற்று (புதன்கிழமை) நீக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு சேர வேண்டிய தொகையை அனுப்புவதில் கால தாமதம் செய்துள்ளனர். அதனால் அந்நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யாததால் குழந்தைகள் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனம் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

எனினும் மாநில அரசு, மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் நிறுத்தப்பட்டதாலா அல்லது வேறு காரணங்களால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x