

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் உள்ளது கைலாஷ் மானசரோவார். அங்கு உத்தராகண்ட் வழியாக பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சிக்கிமின் நாதுலா பகுதி வழியாக மானசரோ வருக்கு பக்தர்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், சிக்கிம் மாநில அரசும் செய்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இவ்வழியே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, நாதுலா வழியாக பக்தர்கள் யாத்திரை செல்வதற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், சீனாவும் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி கையெழுத்திட்டன.
உத்தராகண்ட் வழியாக பக்தர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. பாதையும் கடினமாக இருந்தது. ஆனால், நாதுலா பாதை மிகவும் எளிமையானது. வயதான பக்தர்கள் கூட யாத்திரையில் பங்கேற்க முடியும். வரும் ஜூன் மாதத்தில் 1,600 பக்தர்கள் 10 குழுக்களாக நாதுலா வழியாக கைலாஷ் மானசரோவருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அது தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சிக்கிம் சென்றனர். பக்தர்களின் பயணத்துக்கான கட்டமைப்பு வசதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், புதிய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளும் முகாம்களை ஜே.என். சாலையின் 17-வது மைல் பகுதியிலும், ஷெராதாங் பகுதியிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.