Published : 16 Aug 2017 08:42 PM
Last Updated : 16 Aug 2017 08:42 PM

தமிழக அரசின் நீட் அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 மத்திய அமைச்சகங்கள் நேற்று மாலை ஒப்புதல் அளித்தன. இதை தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்படைக்க இருப்பதால் எந்நேரமும் சட்டம் இயற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு சமர்ப்பித்த அவசர சட்ட மசோதாவை ஆய்வு செய்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. அண்மையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்க மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றி அனுப்பினால், மத்திய அரசு உதவி செய்யும்’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து முதல்வர் கே.பழனிசாமியுடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசரச் சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது. இந்த முன்வரைவை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தார். அதை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தெரிவித்தது. இதையடுத்து சென்னையில் இருந்து இணையதளம் மூலம் கூடுதல் ஆவணங்களை பெற்று உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதை ஏற்று உடனடியாக செயலில் இறங்கிய மத்திய உள்துறையினர் சட்ட முன்வரைவை சுகாதாரம், மனிதவள மேம்பாட்டு துறைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு ஒப்புதல் அளித்த இரு துறையினரும் அதே தினம் மாலை மத்திய உள்துறைக்கு அனுப்பினர். இந்த இரு அமைச்சகங்களின் கருத்துகளுடன் மத்திய சட்டத் துறைக்கு முன்வரைவு நேற்று அனுப்பப்பட்டது. சட்டத் துறையும் இதற்கு ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையே, தமிழக அரசின் அவசரச் சட்டம் குறித்து அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. அவசரச் சட்ட மசோதாவை ஆய்வு செய்த அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கலாம் என்று மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, அவசரச் சட்ட முன்வரைவுக்கான அதிகாரபூர்வ ஒப்புதல் முழுமை பெற்று தமிழக அரசிடம் இன்று ஒப்படைக்கப்படும். இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் அனுமதியுடன் அரசு எந்நேரமும் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘நீட் தேர்வு எழுதியவர்களில் 98 சதவீத மாணவர்கள் மாநில பாடப்பிரிவில் படித்தவர்கள் என்பதும், இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க விவாதித்த அமைச்சர்கள் குழு ஒப்புக்கொண்டது. இதனால், இந்த ஓராண்டு மட்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகு எக்காரணம் கொண்டும் அடுத்த ஆண்டு முதல் விலக்கு அளிக்க முடியாது என்பது உட்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்புதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் மத்திய சட்டம், நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரியை மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x