

இந்தி மொழி, இந்தியாவின் சமூக, கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்தியை அலுவலக பயன்பாட்டில் ஊக்குவிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சி மொழி விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: “இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் நாட்டில், இந்தி மொழி தனித்துவம் வாய்ந் ததாக உள்ளது. நமது சமூக, கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக இந்தி உள்ளது. மக்களிடையேயும், அரசையும் மக்களையும் இணைக்கும் முக்கிய பாலமாக இந்தி மொழி திகழ்கிறது. சமூக நலத்திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால், அது தொடர் பான தகவல்களை இந்தி மற்றும் இந்திய மொழி களில் அளிக்க வேண்டும். இதன் மூலம் அத்திட்டம் பற்றி சாமானியர்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
இணையம், செல்போன் மற்றும் ஊடகங்களில் இந்தி மொழி பயன்பாடு அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தி மொழியை அதிகமாக பயன்படுத்த முழு முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.