Last Updated : 29 Aug, 2017 01:19 PM

 

Published : 29 Aug 2017 01:19 PM
Last Updated : 29 Aug 2017 01:19 PM

அன்றும் இன்றும்.. எனக்கு அச்சமே இல்லை: குர்மீத் சிங்கால் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தும், அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பெண்கள் இருவர்தான்.

குர்மீத்துக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க 18 பெண்களைத் தயார் செய்திருந்தது சிபிஐ தரப்பு. ஆனால் பல்வேறு மிரட்டல்கள், அழுத்தங்களுக்கு இடையே வாக்குமூலம் அளித்தது இரு பெண்கள் மட்டும்தான். அதுவே அவருக்கு பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க ஏதுவாக இருந்தது.

வாக்குமூலம் அளித்த பெண்களில் ஒருவர் தன்னுடைய 40 வயதின் ஆரம்பத்தில் இருக்கிறார். தன் உறவினரின் தொலைபேசி வழியாக 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய அவர், ''2009-ல் முதன்முதலாக குர்மீத்துக்கு எதிராக நான் வாக்குமூலம் அளித்தபோது, அவர் நீதிமன்ற அறையில் இருந்தார். அன்றும் அவரைக் கண்டு நான் பயப்படவில்லை இன்றும் எனக்கு அவர் மீது எவ்வித அச்சமும் இல்லை.

2002-ல் இருந்து நான் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறேன். குர்மீத்துக்கு எதிராக பெயரில்லாமல் எழுதப்பட்ட கடிதத்தை பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றம், அப்போதுதான் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது'' என்றார்.

அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர் கூறும்போது, ''தேரா சச்சா சவுதாவின் சிர்ஸா தலைமையகத்தில் இயங்கி வந்த கல்லூரியில் அந்தப் பெண் படித்துவந்தார். அப்போதுதான் அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். இப்போது அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஒருகாலத்தில் அப்பெண்ணின் சகோதரர் குர்மீத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார்.

பெண்ணின் சகோதரர் படுகொலை

தன் சகோதரிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பின்னரே அவருக்குத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராம் ரஹீம் சிங்கின் கட்டளைப்படி2002-ல் அவர் படுகொலை செய்யப்பட்டார். அநாமதேய கடிதத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்தான் அனுப்பி இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார் குர்மீத்.

குடும்பத்தினரின் ஆதரவு

பெண்ணின் சமூகத்தினர் பழைமைவாதத்தில் ஊறிப்போனவர்களாக இருந்தாலும், அனைவரும் அவரின் பின்னால் நின்றனர். அப்பெண்ணின் தந்தையே ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று வந்தார்.

2009-ல் முதன்முதலாக பெண் வாக்குமூலம் அளித்தார். அப்போதும் உடன் வந்த தந்தை, மற்ற அனைத்து விசாரணைகளையும் தனியாகவே எதிர்கொண்டார்.

அப்போது தேரா சச்சா நிர்வாகம் தொடர்ந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வந்தது. நிலைமை கைமீறிச் சென்றபோது எந்தத் தொகையையும் தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்'' என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் இறுதி விசாரணை செப்டம்பர் 16-ம் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x