

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பக்தர் மாயமாகி உள்ளார். இவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோனி ஆன்னி லட்கேத் (75) சாய்பாபாவின் தீவிர பக்தை. ஆண்டுதோறும் இவர் புட்டபர்த்திக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து பக்தர்களுக்கு சேவை செய்வது வழக்கம்.
இந்நிலையில் புட்டபர்த்தியில் உள்ள சாய் குடியிருப்பு வளா கத்தில் தங்கியிருந்த இவர், கடந்த செப்டம்பர் 20-ம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடிய பின்னர் இவருடன் தங்கியிருந்த சக நாட்டு தோழியான கிரைட் டி சஸ்டர், போலீஸில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த புட்டபர்த்தி போலீஸார், டோனி ஆன்னி லட்கேத் குறித்து பெங்களூரு, கேரளா ஆகிய பகுதிகளில் விசாரனை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் சாய் குடியிருப்பு வளாகத்தின் காவலாளியிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணை காவலாளி கொலை செய்து எங்காவது புதைத்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். காவலாளியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் இதுகுறித்த உண்மை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.