குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்கவைத்துள்ள கர்நாடக அமைச்சரின் விடுதி, வீட்டில் வருமான வரித்துறை சோதனை

குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்கவைத்துள்ள கர்நாடக அமைச்சரின் விடுதி, வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Updated on
2 min read

குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்க வைத்துள்ள கர்நாடக அமைச்சரின் வீட்டிலும், எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

குஜராத்தில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளர்கள் மூவரையும் வெற்றி பெற வைக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் குதிரைப் பேரம் பேசப்படுவதாக புகார் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்ந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம், உடனடியாக 44 எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவுக்கு அனுப்ப முடிவெடுத்தது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெங்களூருவில் வந்திறங்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பிடதியில் உள்ள ஈகல்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரும், அவரது தம்பியும் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ்குமாரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதையும், பதவி விலகுவதையும் தடுக்கும் வகையில் விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் எம்எல்ஏக்களைத் தங்கள் விடுதியில் தங்கவைத்துள்ள அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் டி.கே.சுரேஷ் (எம்.பி.)ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கினர்.

’சோதனை அமைச்சருக்கு மட்டுமே’

பெங்களூருவின் சதாசிவநகரில் உள்ள சகோதரர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள்டன் விடுதியிலும் தீவிர சோதனை நடந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வருமான வரித்துறை, சோதனை கர்நாடக அமைச்சருக்கானது மட்டுமே என்றும், குஜராத் எம்எல்ஏக்களுக்கானதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ஐடி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''வருமான வரித்துறை சட்டப் பிரிவு 132-ன் படி, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனைக்கான நேரம் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. மற்றொரு மாநிலத்தில் இருந்து எம்எல்ஏக்களை கர்நாடகாவுக்கு அழைத்து வந்திருப்பது யாருமே எதிர்பாராத நிகழ்வாக இருக்கிறது.

பெங்களூருவுக்கு அருகில் உள்ள அமைச்சரின் ரிசார்ட்டில் அவர் தங்கியிருக்கக் கூடும் என்று அங்கே சோதனை நடத்தப்பட்டது. சோதனைக் குழுவினர் அமைச்சரின் அறையில் மட்டுமே சோதனை நடத்தினர். குஜராத் எம்எல்ஏக்கள் குறித்து வருமான வரித்துறையினர் கவலைப்படவில்லை, அவர்களின் அறைகளைச் சோதனையிடவும் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

’நிர்வாகச் சீர்கேடு’

இதுகுறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) விடம் பேசிய கர்நாடக அமைச்சரின் சகோதரர் சுரேஷ், ''பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா இருவரும் அரசியல் காய் நகர்த்தல்களை எங்களை நோக்கித் திருப்பி இருக்கின்றனர். இது மத்திய அரசின் நிர்வாகச் சீர்கேட்டைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

எங்களுடைய அனைத்துத் தொழில்களும் சட்டத்துக்கு உட்பட்டே நடைபெற்று வருவதால், நாங்கள் பயப்பட ஒன்றுமில்லை. எங்களின் விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்கள் விருந்தினர்கள். அவர்களுக்கான செலவை குஜராத் காங்கிரஸ் குழுவே செலுத்தும்'' என்றார்.

அறைக்கதவை உடைத்து சோதனை

சுமார் 5 வருடங்களாக கர்நாடக அமைச்சர் மற்றும் அவரின் சகோதரர் தங்கியிருந்த ஈகிள்டன் விடுதியின் இரு வெவ்வேறு அறைகளில் அவர்கள் இல்லாததால், அறைக்கதவை உடைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத இடங்களில் அதிகளவில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in