Last Updated : 22 Aug, 2017 09:57 AM

 

Published : 22 Aug 2017 09:57 AM
Last Updated : 22 Aug 2017 09:57 AM

தேர்தலில் போட்டியிட வயது வரம்பு இல்லை: அமித் ஷா விளக்கத்தால் பாஜக மூத்த எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி

பாஜகவில் 75-க்கும் மேற்பட்டோர் தேர்தல்களில் போட்டியிட தடையேதும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். வயதை காரணம் காட்டி மூத்த தலைவர்கள் சிலர் பதவி விலக்கப்பட்ட நிலையில் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.

வரும் 2019-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி அமித் ஷா நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் மத்தியபிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது, “75 வயதுக்கும் மேற்பட்டோர் வரும் தேர்தலில் போட்டியிடலாமா?” என அமித்ஷாவிடம் கட்சி நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு அமித்ஷா பதில் அளிக்கும்போது, “75 வயதை கடந்தவர்களும் தேர்தலில் போட்டியிடலாம். இது தொடர்பாக எந்த விதமான விதிமுறைகளோ, மரபுகளோ இல்லை” என்றார்.

மூத்த எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி

இவரது விளக்கத்தால் ம.பி. பாஜகவின் இரு மூத்த எம்எல்ஏக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவர்கள் 75 வயதை கடந்தவர்கள் என்பதால் முதல்வர் சிவராஜ்சிங் சவுகானால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் ஒருவரும் ம.பி. முன்னாள் முதல்வருமான பாபுலால் கவுர் (87) கூறும்போது, “அமித்ஷாஜி அளித்த விளக்கத்தால் பல விஷயங்கள் தெளிவாகி விட்டன. நான் 10 முறை எம்எல்ஏவாக இருந்தவன். வரும் 2018 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட எனக்கு எந்த தடையும் இல்லை” என்றார்.

மற்றொரு மூத்த எம்எல்ஏவான சர்தாஜ் சிங் (76) கூறும்போது, எனக்கு 75 வயது முடிந்ததாக காரணம் கூறி எனது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு கட்சியின் தேசிய தலைமை எடுத்த முடிவே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால், இப்போது கட்சியின் தேசிய தலைவரே வயது ஒரு தடையில்லை என்று கூறிவிட்டார். இதனால் நானும் வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்றார்.

குஜராத் முதல்வராக ஆனந்தி பென் பட்டேல் பதவி வகித்தபோது, அவருக்கு 75 வயது நிறைவுபெற்றதாக கூறி கடந்த ஆண்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இவரைப் போலவே, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவும் பதவி விலக்கப்பட்டு, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன் 2014-ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, வயது காரணமாக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பதவிக்கான வாய்ப்பை இழந்தனர். இவர் களுக்காக பாஜகவில் ‘மார்கதர்ஷக் மண்டல்’ என்ற ஆலோசனை அமைப்பு உருவாக்கப்பட்டது.

மத்தியில் தற்போது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ரா கடந்த மாதம் 75 வயதை கடந்துள்ளார். இதனால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் அவர் நீக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், அமித் ஷா அளித்துள்ள விளக்கம் பாஜக மூத்த தலைவர்கள் இடையே புதிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x