

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்த பல்வேறு பகுதிகளில் அவருக்கு பெருகியுள்ள ஆதரவு, எதிர்வரும் மக்களவைத் தேர்தல், மோடி மீதான பொது வாக்கெடுப்பாக மாற்றப்பட வேண்டிய தேவை உள்ளது என்று பாரதிய ஜனதாவின் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜேட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த வாரம் பாஜகவிற்கும், மோடிக்கும் மிகவும் சுறுசுறுப்பான சமயமாக இருந்தது. கடந்த சனிக்கிழமை அன்று இம்பால், கவுகாத்தியிலும், இறுதியாக சென்னைக் கூட்டங்களில் மோடி பேசினார். ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் ஒரு கல்வி நிறுவனத்திலும், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் இதுவரை இல்லாத அளவில் மக்கள் கூட்டம் வந்திருந்தது. மணிப்பூரின் இம்பாலில் இதுவரை நடைபெற்றதில் இது பிரமாண்ட கூட்டமாகும். அந்த மாநிலத்தில் பாஜகவிற்கு வலுவமான அமைப்பு இல்லாவிட்டாலும், இப்படிப்பட்ட கூட்டம் திரண்டது மக்களின் தற்போதைய மனநிலையைக் காட்டுகிறது.
இதுபோலவே கவுகாத்தி, சென்னை நகரங்களிலும் மற்றும் கேரள மாநிலத்திலும் அவர் பெரும் கூட்டத்தை கவர்ந்தார். இதுவரை பாஜகவிற்கு கடந்த காலத்தில் குறைவான ஆதரவு கொடுத்த சமுதாயத்தினர், இந்த நிகழ்ச்சிகளில் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தற்போது மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். மக்கள் ஒரு பெரிய, உணர்வூட்டும் முடிவெடுக்கக் கூடிய தலைவரை எதிர்பார்க்கிறார்கள். பாஜகவிற்கு பாரம்பரியமாக வலிமையற்ற மாநிலங்களில் இப்படி எப்போதும் இல்லாத ஆதரவு எதைக் காட்டுகிறது?
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களில் அவருக்கு வந்த கூட்டம் வேறு எதையோ காட்டுகிறது.
கோபமடைந்துள்ள மக்கள் மோடியை மாற்றத்திற்கான, நல்ல மாற்றத்திற்கான நம்பிக்கையாகப் பார்க்கிறார்கள். அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஆதரவு, வரும் தேர்தலில் மோடி மீதான பொதுவாக்கெடுப்பாக மாற்றப்பட வேண்டிய தேவையுள்ளது. அப்படி அவர் செய்தால் அது பாஜகவின்ன் வெற்றித் தொகுதிகளாக மாறும்" என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.