Published : 01 Aug 2017 09:29 AM
Last Updated : 01 Aug 2017 09:29 AM

வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளை ஊக்குவிக்கிறது: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் புகார்

பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளை மத்திய அரசு ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மக்களவையில் இது தொடர்பான விவாதத்தைத் தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசியதாவது:

சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பசு குண்டர்கள் கும்பலால் நடத்தப்படும் வன்முறையால் இந்தப் பிரிவினர்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலமாக பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் தலித், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இதுபோன்ற வன்முறைகள் அதிக அளவில் நடக்கின்றன. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள்தான் இதுபோன்ற வன்முறை செயலில் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

இதனால் நாடு முழுவதும் மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ‘இந்துஸ்தான்’ நாட்டை ‘லிஞ்சிஸ்தான்’ ஆக மாற அனுமதிக்கக் கூடாது.

சமீபத்தில் கேரளாவில் பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அம்மாநில ஆளுநர் காவல் துறை தலைவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் குறித்து இதுபோன்ற விளக்கம் கேட்கப்படவில்லை. இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் பதில் அளிக்கையில், “பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

கார்கேவுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக உறுப்பினர் ஹுகும்தேவ் நாராயண் யாதவ் பேசும் போது “வன்முறைகளுக்கு பிரதமர் மோடி எப்போதும் கண்டனம் தெரிவித்து வருகிறார். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சிலர் தீவிரவாத செயலில் ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் எங்களுடைய நோக்கம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர். இது தவறு” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x