Published : 23 Aug 2017 06:28 PM
Last Updated : 23 Aug 2017 06:28 PM

ரயில்வே வாரிய சேர்மனாக ஏர் இந்தியா இயக்குநர் அஷ்வனி லோஹானி நியமனம்

ஏ.கே.மிட்டலின் ராஜினாமாவை அடுத்து, ரயில்வே வாரிய சேர்மனாக ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் அஷ்வானி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மோசமான இருப்புப்பாதை பராமரிப்பு காரணமாக, ஆகஸ்ட் 19-ம் தேதி பூரி- ஹரித்வார் உத்கல் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. ஆகஸ்ட் 23-ம் தேதி இதே உ.பி.யில் ஆரையா மாவட்டத்தில் கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 25 பேர் காயமடைந்தனர்.

5 நாட்களில் உ.பி.யில் இரண்டு ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளது. காரணம் மோசமான பராமரிப்பு. ரயில்வே சேவைகளை தனியாரிடம் விட்டுவிட கவனம் செலுத்தி வரும் மத்திய அரசுக்கும், கூட்டத்துக்குக் கூட்டம் ரயில் பாதுகாப்புக்காக இத்தனை நிதி ஒதுக்கீடு என்று கூறிவரும் பிரதமர் மோடிக்கும் இந்த ரயில் விபத்துகள் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இதைத் தொடர்ந்து விபத்துகளுக்கு தார்மிக ரீதியாகப் பொறுப்பேற்று ரயில்வே வாரிய சேர்மன் ஏ.கே.மிட்டல் செவ்வாய்க்கிழமை மாலையில் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், புதிய சேர்மனாகப் பொறுப்பெற்றுள்ள லோஹானி இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். 4 பொறியியல் பட்டப்படிப்புகளை படித்தவர்.

இயந்திரவியல் பொறியியலில் இந்திய ரயில்வே சேவை நிலையில் உள்ள லோஹானி, டெல்லி பிரிவின் துணை பிராந்திய மேலாளராகப் பதவி வகித்துள்ளார். தேசிய ரயில்வே அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும், ரயில் மாற்று எரிபொருளின் தலைமை நிர்வாக அலுவலராகவும் இருந்துள்ளார்.

உலகத்தின் பழைய நீராவி இயந்திர வடிவமைப்பில் உருவான ஃபேரி குயின் எக்ஸ்பிரஸ் என்னும் ரயிலை வெற்றிகரமாக ஓட்டியதற்காக, கின்னஸ் சாதனை பெற்றவர் லோஹானி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x