Last Updated : 03 Aug, 2017 09:15 AM

 

Published : 03 Aug 2017 09:15 AM
Last Updated : 03 Aug 2017 09:15 AM

பாஜக அரசியல் ரீதியாக பழிவாங்குகிறது: கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆவேசம்

மத்தியில் ஆளும் பாஜக அரசு காங்கிரஸை அரசியல் ரீதியாக பழிவாங்கும் விதமாகவே வருமான வரித்துறை சோதனையை நடத்தி யுள்ளது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சித்த ராமையா பெங்களூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவும், நெருக்கடி கொடுக்கவுமே மத்திய அரசு இந்த வருமான வரித்துறை சோதனையை நடத்தி உள்ளது. இது அப்பட்டமான‌ அரசியல் பழிவாங்கும் செயல். அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட போலி வருமான வரி சோதனை. இந்த சோதனையில் உள்ளூர் போலீஸார் பயன்படுத்தப்பட வில்லை. காவல் துறையின் விதிகளை மீறி மத்திய பாதுகாப்பு படையை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது. இந்த போக்கை ஒரு போதும் ஏற்க முடியாது.

பாஜகவுக்கு எதிரான எங்களது குரலை அடக்க வருமான வரித்துறை ஏவி விடப்பட்டுள்ளது. மத்திய பாஜக‌ அரசுக்கு எதிரான காங்கிரஸாரின் போராட்டத்தை அடக்க பார்க்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக வருமான வரித்துறையை பயன்படுத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தும், மத்தியில் ஆளும் பாஜக‌ அரசுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவர்.

நாடாளுமன்றத்தில் அமளி

கர்நாடக அமைச்சர் சிவகுமாரின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து மக்களவை மற்றும் மாநிலங்களையில் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு வந்த காங்கிரஸ் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். குஜராத்தில் காங்கிரஸாருக்கு பாதுகாப்பு இல்லை. எனவேதான் கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களைக் குறி வைத்தே இந்த வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இதை துணை சபாநாயகர் குரியன் தடுக்க முயற்சித்த போதும் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “வருமான வரி சோதனை மூலம் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் செயல். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் சோதனைகள் நடைபெறுவது சரியான செயல் அல்ல” என்றார்.

அருண் ஜேட்லி விளக்கம்

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, “குஜராத் மாநிலங் களவை தேர்தல் நேர்மையான முறையில் நடக்க வேண்டும். எதற்காக இப்போது வருமான வரி சோதனை நடத்தப்பட்டது? ஒரு மாதத்துக்கு முன்னால் ஏன் நடத்தவில்லை?’’ என்றுகேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “கர்நாடக அமைச்சர் டி.கே.சிவ குமாரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை. குஜராத் எம்எல்ஏக் கள் தங்கியுள்ள விடுதியில் சோதனையும் நடைபெறவில்லை. எந்த எம்.எல்.ஏ.விடமும் சோதனை நடைபெறவில்லை. அங்கு இருந்த கர்நாடக அமைச்சரிடம் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது” என விளக்கம் அளித்தார்.

காவல் துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கர்நாடக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வருமான வரி சோதனை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், வருமான வரி சோதனையில் உள்ளூர் போலீஸார் பயன்படுத்தாது ஏன்? எதன் அடிப்படையில் மத்திய பாதுகாப்பு படையினர் பயன்படுத்தப்பட்டனர்? அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பி, விளக்கம் கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x