Published : 14 Aug 2017 09:37 AM
Last Updated : 14 Aug 2017 09:37 AM

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் முதல்வர், மத்திய அமைச்சர் ஆய்வு: ரூ.85 கோடியில் குழந்தை நோய் ஆராய்ச்சி மையம்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் குழந்தைகள் நோய் குறித்த ஆராய்ச்சிக்காக ரூ.85 கோடியில் மண்டல மருத்துவ மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் அரசுக்கு சொந்தமான பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான 5 நாட்களில் அடுத்தடுத்து 60 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. இந்நிலையில் சனிக்கிழமை 10 குழந்தைகளும் நேற்று ஒரு குழந்தையும் உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

பெரும்பாலான குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதவிர மூளையில் ஏற்பட்ட நோய் தொற்றும் சில குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜிவ் மிஷ்ரா பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கோரக்பூர் மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதல்வர் ஆதித்யநாத் கூறும்போது, “தொற்று நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக கிழக்கு உத்தரபிரதேசம் விளங்குகிறது. எனவே, இப்பகுதியில் முழுமையான வைரஸ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் வரையில் இந்த நோய்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இப்பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. ஆனால், கோரக்பூரில் முழுமையான வைரஸ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

பின்னர் ஜே.பி.நட்டா கூறும்போது, “இந்த மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்தது பற்றிய தகவல் அறிந்த பிரதமர் மோடி மிகவும் மன வேதனை அடைந்துள்ளார். மேலும் அவர் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இந்த மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் மூளை தொற்று நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து, ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதும் ஆதித்யநாத் பிரச்சினை எழுப்புவார். குழந்தைகள் நோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என கடந்த கூட்டத்தொடரின்போதே ஆதித்யநாத்திடம் உறுதி அளித்திருந்தேன்.

அதன்படி, கோரக்பூரில் குழந்தைகள் நோய் குறித்த ஆராய்ச்சிக்காக ரூ.85 கோடியில் மண்டல மருத்துவ மையம் அமைக்கப்படும். இங்கு வருவதற்கு முன்பு இதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தேன். குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்று மற்றும் அதற்கான காரணம் குறித்து இந்த மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x