

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவருக்கு பஞ்சாயத்து சார்பில் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பால் மாவட்டத்தில் 45 வயதுடைய ஒருவருக்கும் 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. 10 நாட்களில் இந்த தம்பதிக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர், பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து துர்க் (முஸ்லிம் பிரிவு) சமுதாய பஞ்சாயத்து ஒருங்கிணைப்பாளர் ஷாஹித் ஹுசைன் கூறும்போது, “ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக அந்தப் பெண்ணின் குடும்பத்தார் புகார் செய்தனர். இதையடுத்து 52 கிராமங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ரைசதி என்ற இடத்தில் உள்ள மதரசா கலில்-உல்-உலூமில் ஒன்று கூடி விவாதித்தனர்.
பின்னர் தலாக் கூறி விவாகரத்து செய்த நபர் உடனடியாக ரூ.2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அந்தப் பெண்ணின் குடும்பத்தார் வரதட்சணையாக வழங்கிய பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரத்தை திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டது” என்றார்.
முத்தலாக் முறையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், உத்தரபிரதேச கிராம சபையில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.