Published : 14 Aug 2017 05:44 PM
Last Updated : 14 Aug 2017 05:44 PM

விசாரணையில் பங்கேற்காமல் கார்த்தி சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேற முடியாது: உச்ச நீதிமன்றம்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குடியேற்றத்துறை விடுத்திருந்த லுக் அவுட் சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

ஊழல் குறித்த விசாரணையில் ‘ஒத்துழைப்பு, பங்கேற்பு’ வழங்காமல் இந்தியாவை விட்டு கார்த்தி சிதம்பரம் வெளியேற முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் டி.ஒய்.சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை அதிகாரிகளின் முன் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

“எங்கள் விஷயம் ஒன்றேயொன்றுதான். நீங்கள் (கார்த்தி சிதம்பரம்) விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அதெப்படி இந்த நாட்டில் தங்களுக்கு எதிராக உள்ள விசாரணைகளுக்கு பதில் அளிக்காமல் இருக்க முடியும்?” என்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கேட்டுள்ளார்.

விசாரணையையே கைவிட வலியுறுத்தும் கார்த்தி சிதம்பரத்தின் மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுவரை காத்திருப்பது பற்றிய முடிவை கார்த்தி சிதம்பரமே முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

ஆனால், “இப்போதைக்கு விசாரணையில் பங்கேற்காமல் நாட்டை விட்டு நீங்கள் வெளியேற முடியாது” என்று வாய்மொழியாக நீதிபதி கேஹர் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கோர்ட்டில் கூறியபோது, ஆகஸ்ட் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே பிரிட்டன் செல்ல டிக்கெட் புக் செய்துள்ளார் என்றார், இதற்கு தலைமை நீதிபதி கேஹர் பதில் அளிக்கும் போது, “அயல்நாடு செல்ல அனுமதித்து பிறகு அவர்கள் திரும்பி வராதது குறித்த கசப்பான அனுபவம் ஏற்கெனவே நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே விசாரணை அதிகாரியின் முன் ஆஜராகி உங்கள் நல்லெண்ணத்தை முதலில் காட்டுங்கள்” என்றார்.

கடந்த மே 15-ல் கார்த்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. ஜூன் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜூன் 15-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பதை கோர்ட் சுட்டிக்காட்டியது. இதற்கு அடுத்த நாளில்தான் சிபிஐ ஜூன் 16-ம் தேதி லுக் அவுட் சுற்றறிக்கை அனுப்பியது.

இதற்கு பதில் அளித்த கோபால் சுப்பிரமணியம், கார்த்தி விசாரணை முகமையுடன் வேறு ஒரு தேதி கேட்டிருந்தார், இதனையடுத்து ஜூலை 21ம் தேதி ஆஜராகுமாறு ஜூலை 4-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனவே ஜூலை 21-ம் தேதிக்குப் பிறகுதான் லுக் அவுட் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அப்போதுதான் இவருக்கே லுக் அவுட் சுற்றறிக்கை விவகாரமே தெரியவந்தது என்றார்.

ஆனால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதற்கு பதில் அளித்த போது, சிபிஐ அளித்த லுக் அவுட் நோட்டீஸின் நோக்கம் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதான மொழியில் இல்லை என்றார். அவர் வெளிநாடு செல்ல முடியாததை உறுதி செய்வதன் நோட்டீஸ்தான் அது என்றார்.

இதற்கு வலுவாக குறுக்கிட்ட கோபால் சுப்பிரமணியம், “ஒரு குடிமகனின் பயண உரிமையில் எப்போது அரசு தலையிட முடியும் என்ற கேள்வியை பரிசீலிக்க வேண்டும். இதே கோர்ட் அறையில் விசாரணை அதிகாரியுடன் கார்த்தி சிதம்பரம் உள்ளார், அவரது தந்தை உள்ளார், அவருக்கு மகள் உள்ளார், அவர் குடும்பம் இங்குதான் உள்ளது” என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி கேஹர் குறுக்கிட்டு, “அவர் குற்றவாளியா இல்லையா என்பதைப் பற்றியதல்ல எங்கள் விஷயம். அதைவிட மிகச்சிறிய ஒரு விவகாரம்தான், விசாரணை அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளித்தாரா? விசாரணையில் பங்கேற்றாரா? என்பதே. இதற்கு விடை ‘இல்லை’ என்பதாகவே உள்ளது.

லுக் அவுட் சுற்றறிக்கை அனுப்பியதில் என்ன தவறு? சிபிஐ விசாரித்து வருகிறது, அவர் வெளிநாடு சென்று விடக்கூடாது என்று சிபிஐ விரும்புகிறது. மேலும் சுற்றறிக்கையில் அவர் கைது செய்யப்படுவதாக எதுவும் இல்லை. வெளிநாடு செல்வதை தடுக்கின்றனர் அவ்வளவே” என்றார்.

இதனையடுத்து கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x