Last Updated : 20 Aug, 2017 10:56 AM

 

Published : 20 Aug 2017 10:56 AM
Last Updated : 20 Aug 2017 10:56 AM

பெங்களூருவில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை மற்றும் தெருக்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளுக்கே முடங்கியுள்ளனர்.

பெங்களூருவில் கடந்த சில தினங்களாக இரவிலும், பகலிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோரமங்களா, ஈஜிபுரா, சாந்திநகர், கே.ஆர்.புரம், அல்சூர் உள்ளிட்ட இடங்களில் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ்தளத்திலும், சில வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர் மழை காரணமாக பெங்களூருவின் பெரும்பாலான சாலைகளிலும் சுரங்கப்பாதை களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் வாகன உரிமையாளர்கள் இழப்பீடு கோரி காப்பீட்டு நிறுவனத்தை அணுகியுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே பெல்லந்தூர், வர்தூர் ஆகிய ஏரிகளில் அதிகளவில் ரசாயனம் கலந்த மழை நீர் கலப்பதால், ஏரிகள் பொங்கி வருகின்றன. இதனால் ஏரிகளில் மலை போல தேங்கியுள்ள நுரை காற்றில் பறந்து அருகிலுள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களின் மீது விழுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் நுரை உருவாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.

வாரத்தின் இறுதி நாளான நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்து கொண்டே இருந்ததால் எம்.ஜி.சாலை, கமர்சியல் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. இந்த மழையின் காரணமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பெங்களூருவில் அடுத்த 3 தினங்களுக்கும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x