Published : 14 Aug 2017 12:39 PM
Last Updated : 14 Aug 2017 12:39 PM

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை: மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இன்றைக்கே (ஆகஸ்ட் 14-ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ‘ஐஎன்எக்ஸ் மீடியா’என்ற நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, அவருக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் ‘லுக்-அவுட்’ சுற்றறிக்கையை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்குத்தான் ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை பிறப்பிக்கப்படும். சிபிஐ அனுப்பிய அனைத்து சம்மன்களுக்கும் முறையாக வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்துள்ளேன். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளேன். நான் இந்த மாத இறுதியில் வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். அதைத் தடுப்பதற்காகவே தற்போது எனக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த ‘லுக்-அவுட்’ சுற்றறிக்கைக்கு வரும் செப்டம்பர் 4-ம் தேதி வரை இடைக்காலத் தடை பிறப்பித்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு முன் இன்று மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய தினமே மனுவை விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x