Published : 23 Aug 2017 11:06 AM
Last Updated : 23 Aug 2017 11:06 AM

முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி: பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் கருத்து

முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரிய தலைவர் ஷாயிஸ்தா அம்பர் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது. இது இந்திய பெண்களின் வெற்றி. குறிப்பாக இஸ்லாம், முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

இஸ்லாமில் முத்தலாக் முறை கிடையாது. சில மதத் தலைவர்களால் இந்த நடைமுறை அமல் செய்யப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கடும் துயரங்களை அனுபவித்து வந்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. முத்தலாக் நடைமுறைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதற்கு உடனடியாக சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் மவுலானா யாசூப் அப்பாஸ் கூறியதாவது: முகமது நபியின் காலத்தில் முத்தலாக் நடைமுறை கிடையாது. இந்த நடைமுறையால் முஸ்லிம் பெண்கள் பல்வேறு விதங்களில் துன்புறுத்தப்பட்டனர்.

உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டதுபோல முத்தலாக்கை ஒழிக்கவும் கடும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக எங்களது வாரிய உறுப்பினர்களின் கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x