Last Updated : 11 Aug, 2017 04:03 PM

 

Published : 11 Aug 2017 04:03 PM
Last Updated : 11 Aug 2017 04:03 PM

நீட் தேர்வுக்கு விலக்கு கோரினேன்: பிரதமருடனான சந்திப்புக்குப் பின் முதல்வர் பழனிசாமி பேட்டி

 

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பிரதமர் மோடியிடம் மீண்டும் வலியுறுத்தி பேசியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பிரதமர் மோடியிடம் மீண்டும் வலியுறுத்தினேன்" என்றார். 85% இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை இல்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து முழுமையாக அறிந்த பின்னரே தகவல் தெரிவிக்க முடியும் என்றார்.

தேவைப்பட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு, " ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், '420' என டிடிவி தினகரன் பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “420 என தினகரன் கூறியது அவருக்குத்தான் பொருந்தும். மூன்று மாத நிகழ்வுகளைப் பார்த்தால் அதற்கு தினகரன் தான் பொருத்தமானவராக இருப்பார்" எனத் தெரிவித்தார்.

எம்.பி.க்களுடன் சந்திப்பு:

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக எம்.வெங்கய்ய நாயுடு இன்று பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு டெல்லி புறப்பட்டு வந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய இவரை, மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை மற்றும் தமிழக எம்பிக்கள் வரவேற்று மலர் பூங்கொத்து வழங்கினார்கள். பிறகு நாடாளுமன்ற இருஅவைகளின் தமிழக எம்பிக்கள் பெரும்பாலனவர்களையும் முதல்வர் பழனிசாமி தனியாக சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x