

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாட்னாவில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களவைத் தேர்தலின்போது கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அவரது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சட்டத்துக்குட்பட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, கருப்பு பண மீட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் துணைத்தலைவர் அரிஜித் பசாயத் மற்றும் பல்வேறு உளவு அமைப்புகளின் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.