

உடனடி முத்தலாக் முறையை முஸ்லிம்களின் புனித நூலான ‘குரான்’ அங்கீகரிக்கவில்லை என்று அனைத்து இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்காக பின்பற்றும் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளில் நடைபெற்ற விசாரணையின்போது, முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆரிப் முகமது கான் வாதிட்டதாவது:
முஸ்லிம்களின் புனித நூலான குரான், திருமணமான தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், 4 முறைகளில் மணமுறிவு (தலாக்) செய்துகொள்ள அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் உடனடியாக தலாக் என 3 முறை கூறி மணமுறிவு செய்துகொள்ள அங்கீகாரம் வழங்கவில்லை.
உடனடி தலாக் என்பது இஸ்லாம் மதத்தின் அடிப்படை உரிமைக்கு அப்பாற்பட்டது. இது குரானில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல விஷயங்களை மீறும் செயல். எனவே, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமே உடனடி முத்தலாக் சட்டத்தை உருவாக்கி இருந்தாலும் அது செல்லாது. கருணை, இரக்கம் ஆகியவற்றுக்கு இடம் இல்லாத எந்த சட்டமும், விதிகளும் இஸ்லாம் மதத்தின் ஒரு பகுதியாக இருக் முடியாது.
இதுபோன்ற நடைமுறையை அனுமதிப்பது, பெண்கள் உயிருடன் மண்ணில் புதைக்கப் பட்ட இஸ்லாத்துக்கு முந்தைய காலத்துக்கே அழைத்துச் செல்லும்.
தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதில் பலன் கிடைக்காவிட்டால் உறவினர்கள் மூலம் சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மட்டுமே, கணவன் மூன்று முறை தலாக் எனக் கூறி மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும். இதற்கு மூன்று மாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குரானில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல, தலாக் கூறி பிரிந்த பிரிந்த பெண் மீண்டும் கணவருடன் இணைந்து வாழ வேண்டுமானால், மூன்றாவது நபரை தற்காலிகமாக திருமணம் செய்து கொண்டு அடுத்த நாளில் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற ‘நிக்கா ஹலாலா’ முறையையும் குரான் அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடனடி முத்தலாக் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு ஆதரவாக உள்ளது. ஆனால், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முத்தலாக் முறையை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டு வருகிறது.