

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து, இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தன் விடுதியில் தங்க வைத்திருந்த கர்நாடக எரிசக்தி அமைச்சர் டி.கே.சிவக்குமார் வீட்டில் புதன்கிழமை அன்று தொடங்கிய ஐடி ரெய்டு சனிக்கிழமை காலையில் முடிவடைந்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த சொகுசு விடுதி உள்ள இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
அமைச்சர் சிவகுமாருக்கு நெருக்கமான டி.கே. சுரேஷ், எம்எல்சி ரவி மற்றும் உறவினர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதில் டி.கே.சிவகுமாரின் பெங்களூரு வீட்டில் கடந்த 4 நாட்களாக சோதனை நடந்தது.
இந்த சோதனைகளின்போது டி.கே.சுரேஷுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் சிக்கின. இதில் பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்த தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது. இவையனைத்தையும் வருமான வரி சோதனை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் கொண்டு சென்றனர்.
அதைத் தொடர்ந்து கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் சிவக்குமார் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினார்.
அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.