Published : 18 Aug 2017 10:23 am

Updated : 18 Aug 2017 10:23 am

 

Published : 18 Aug 2017 10:23 AM
Last Updated : 18 Aug 2017 10:23 AM

மாநில கட்சிகளுக்கு பாஜகவால் நெருக்கடியா?

பாரதிய ஜனதாவால் மாநிலக் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் 2019 மக்களவை தேர்தலை கருத்தில்கொண்டு பல்வேறு மாநிலங்களில் இக்கட்சிகள் குறி வைக்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கியது. இந்நிலையில் அடுத்து சில மாநிலங்களில் வந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தனித்தே போட்டியிட விரும்பியது. இதில் பிஹாரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மீண்டும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்ததுடன், மாநில மற்றும் பிராந்தியக் கட்சிகள் பலவற்றை குறிவைக்கத் தொடங்கியது. அந்தக் கட்சிகளைத் தங்களுடன் கூட்டு சேர்ப்பது அல்லது அதன் முக்கியத் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுப்பது என்பதே பாஜகவின் உத்தியாக கூறப்படுகிறது.


ஒடிசாவில் பிஜு பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆளும் கட்சியாக உள்ளது. இங்கு 2019-ல் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக பிஜேடியில் இருந்து பலர் பாஜகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது. இக்கட்சியின் 20 எம்.பி.க்களில் 12 பேர் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இவர்களுடன் அக்கட்சியின் முக்கியத் தலைவரான பி.ஜே.பாண்டா மற்றும் எம்எல்ஏக்கள் பலர் பாஜகவில் இணைவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதேநிலை பிஹார் மற்றும் உ.பி.யிலும் நிலவுகிறது. பிஹாரில் மெகா கூட்டணியை விட்டு நிதிஷ் குமார் வெளியேறி பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டார். இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 27 பேரில் ஒரு டஜன் பேர் பாஜகவில் இணைய விரும்புவதாகக் கூறப்படுகிறது.

உ.பி.யில் அகிலேஷ்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் மேலவை உறுப்பினர்கள் 3 பேர் கடந்த ஒரே வாரத்தில் பாஜகவில் இணைந்தனர். தற்போது அமர்சிங் உள்ளிட்ட 2 எம்.பி.க்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரத் தயாராகி வருகின்றனர். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஆபத்து தொடர்கிறது. இக்கட்சியின் ஓர் எம்எல்சி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார். தற்போது 8 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் இவர்கள் எந்நேரமும் அக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிட் ஆளும் திரிபுராவில் காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சிகளாக உள்ளன. இவற்றில் மம்தா கட்சியின் 6 எம்எல்ஏக்களை கடந்த 7-ம் தேதி பாஜக தனது பக்கம் இழுத்துவிட்டது. இதனால் பாஜக தற்போது முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக அங்கு உருவெடுத்துள்ளது. மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவால் நெருக்கடி தொடங்கியுள்ளதாகவும் இதை தடுக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர் சரத் பவார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x