Published : 10 Aug 2017 10:19 AM
Last Updated : 10 Aug 2017 10:19 AM

எந்த சவாலையும் சந்திக்கும் வலிமை ராணுவத்துக்கு உள்ளது: மாநிலங்களவையில் அருண் ஜேட்லி பேச்சு

எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் போதுமான வலிமையுடன் உள்ளது என்று ராணுவ அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். 1948 முதல் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டும் என்பது நாட்டு மக்களின் முதன்மையான விருப்பம் என்றும் ஜேட்லி கூறினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தை தொடங்கி வைத்து அருண் ஜேட்லி பேசியதாவது:

கடந்த பல ஆண்டுகளில் இந்தியா எத்தனையோ சவால்களை பார்த்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு சவாலில் இருந்தும் நாடு வலிமையாக உருவாகியிருக்கிறது. 1962-ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் இருந்து நமது ராணுவம் முழு வலிமையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா பாடம் கற்றுக் கொண்டுள்ளது. இப்போதும், நமது அண்டை நாடுகளிடம் இருந்து சவால்களை இந்தியா சந்திக்கிறது.

1962-ல் சீனா சுமத்திய போரில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், 1965 மற்றும் 1971- ல் பாகிஸ்தானுடன் நடந்த போரின்போது இந்திய ராணுவம் வலிமையடைந்துவிட்டது. இப்போதும் சிலர் நமது நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் குறிவைக்கின்றனர். சவால்கள் வந்தாலும் நமது வீரமிக்க ராணுவத்தினர் நமது நாட்டை காப்பதில் முழு தகுதியுடன் இருக்கின்றனர் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எந்த சவாலையும் சமாளிக்க இந்திய ராணுவம் போதுமான வலிமையுடன் உள்ளது.

சுதந்திரத்துக்கு பிறகு காஷ்மீர் மீது நமது அண்டைநாடு (பாகிஸ்தான்) கண்வைத்தது. நாட்டின் ஒரு பகுதி துண்டாடப்பட்டதை மறக்க முடியாது. காஷ்மீரில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க வேண்டும் என்பது மக்களின் முதன்மையான விருப்பம்.

நாட்டுக்கு பயங்கரவாதமும் இடதுசாரி தீவிரவாதமும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. நாட்டிற்கு வெளியேயிருந்தும் உள்ளிருந்தும் சிலர் தீவிரவாதத்தை குறிப்பாக வடக்கு பகுதிகளில் பரப்ப முயற்சிக்கின்றனர். தீவிரவாதத்துக்கு ஒரு பிரதமரையும் ஒரு முன்னாள் பிரதமரையும் இழந்திருக்கிறோம். தீவிரவாதத்தை நாடு ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். மதம், அரசியல் என எந்த வடிவில் தீவிரவாதம் வந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. ஜாதி, மத வேற்றுமைகள் இருந்தாலும் நல்லிணக்கம் காக்க வேண்டும்.

இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x