ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா முடிவு: பிரதமரைச் சந்தித்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா முடிவு: பிரதமரைச் சந்தித்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
Updated on
1 min read

சமீபத்தில் நிகழந்த ரயில் விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முடிவெடுத்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இது தொடர்பாக பிரதமரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

“நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து சமீபத்திய ரயில் விபத்துகளுக்கு முழுப்பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்றேன், பிரதமர் என்னை அவசரப்பட வேண்டாம், காத்திருக்கவும் என்று கூறினார்” என சுரேஷ் பிரபு ட்விட்டரில் தெரிவித்தார்.

“3 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இந்தப் பதவியில் இருக்கிறேன், ரயில்வேயின் மேம்பாட்டுக்காக என் ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தியிருக்கிறேன். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த ரயில்வே சீர்த்திருத்தங்களில் பிரதமர் தலைமையில் இதுவரையில்லாத முதலீடுகள், மைல்கற்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

பிரதமர் கனவு காணும் புதிய இந்தியாவின் அங்கமாக ரயில்வே திறம்படவும் நவீனமயமாகவும் செயல்பட வேண்டும். இதுதான் வழி என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். இதே வழியில்தான் ரயில்வே துறை தற்போது பயணித்து வருகிறது” என்றார் சுரேஷ் பிரபு.

அகஸ்ட் 19-ம் தேதி பூரி-ஹரித்வார் உத்கல் விரைவு ரயில் உ.பியில் மோசமான இருப்புப்பாதை பராமரிப்புக் காரணமாக 14 பெட்டிகள் கவிழ்ந்தன. ஆகஸ்ட் 23-ம் தேதி இதே உ.பி.யில் ஆரையா மாவட்டத்தில் கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 25 பேர் காயமடைந்தனர்.

5 நாட்களில் உ.பி.யில் இரண்டு ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளது. காரணம் மோசமான பராமரிப்பு. ரயில்வே சேவைகளை தனியாரிடம் விட்டுவிட கவனம் செலுத்தி வரும் மத்திய அரசும், கூட்டத்துக்குக் கூட்டம் பாதுகாப்புக்காக இத்தனை நிதி ஒதுக்கீடு என்று கூறிவரும் பிரதமர் மோடிக்கும் இந்த ரயில் விபத்துகள் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

நேற்று ரயில்வே வாரிய சேர்மன் ஏ.கே.மிட்டல் ராஜினாமா செய்ய விரும்புவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சுரேஷ் பிரபுவும் ராஜினாமா செய்ய பிரதமரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in