

முஸ்லிம்கள் முத்தலாக் நடைமுறையை மாற்றாவிட்டால் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
அமராவதியில் பொதுக்கூட்டமொன்றில் வெங்கய்ய நாயுடு இது குறித்து பேசியதாவது:
சமூகம்தான் இந்த விஷயத்தைக் கையில் எடுக்க வேண்டும். (முஸ்லும்) சமூகத்தினரே இந்த நடைமுறையை மாற்றினால் நல்லது. இல்லையெனில் அரசு புதிய சட்டம் கொண்டு வரும் சூழ்நிலை ஏற்படலாம்.
இது எந்த மதத்தினரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதாகாது, இது பெண்களுக்கு நீதி வழங்குவதற்கான விஷயமாகும். அனைத்துப் பெண்களுக்கு சம உரிமை உள்ளது. சட்டத்திற்கு முன் சமத்துவம், இதுதான் விஷயம்.
இந்து சமூகத்தில் பால்ய விவாக நடைமுறையை சட்டம் கொண்டே அகற்றினார்கள். அதே போல் சதி நடைமுறையும் சட்டத்தின் மூலமே அகற்றப்பட்டது. 3வதாக வரதட்சணை, இதற்கு வரதட்சணை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இந்துக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.
சமூக நலன்களுக்கு விரோதமான நடைமுறைகளை இந்து சமுதாயம் விவாதித்து சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இன்னும் சில சீர்த்திருத்தங்கள் தேவைப்படுகிறது அந்தப் பாதையில் சில முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மனிதர்களை மனிதர்களாகப் பாருங்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் என்று பிரித்துப் பார்க்காதீர்கள். இத்தகைய பாகுபாடுகள் மூலம் பெண்களுக்கு எந்த விதமான அநீதியையும் இழைக்கக் கூடாது.
இவ்வாறு பேசிய அவர், ‘நரேந்திர மோடி 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய ஒரே ஆசை. தேசத்தின் உணர்வும் அப்படித்தான் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மோடி பிரதமராக நீடித்தால் இந்தியா உலகில் வலுவான நாடாக எழுச்சியுறும்’ என்றார்.