Published : 31 Aug 2017 09:29 AM
Last Updated : 31 Aug 2017 09:29 AM

உ.பி.யின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 61 குழந்தைகள் பலி: ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 290 பேர் இறந்ததாக தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை தடைபட்டதால் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அங்கு மீண்டும் 61 குழந்தைகள் 72 மணி நேரத்தில் இறந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்களில் இக்குழந்தைகள் இறந்துள்ளன. மூளைக்காய்ச்சல், நிமோனியா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் இவை இறந்துள்ளன. இவற்றில் 11 குழந்தைகள் மூளைக்காய்ச்சல் சிகிச்சை பிரிவிலும், 11 குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிலும் 25 குழந்தைகள் பொது சிகிச்சை பிரிவிலும் இறந்துள்ளன.

இது தொடர்பாக குழந்தைகள் மருத்துவ நிபுணர் ஆர்.என்.சிங் கூறும்போது, “உ.பி.யில் கடந்த ஜனவரியில் மூளைக்காய்ச்சல் பரவத் தொடங்கியபோது, அதை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் சமீபத்தில் பெய்த கனமழையும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கொசு உற்பத்தியை தடுப்பது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பணிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை” என்றார்.

இந்த மருத்துவமனையில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த பிறகு மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்தியது. என்றாலும் நோய்த்தொற்றுக்கு ஆளான குழந்தைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு படுக்கையில் 3 அல்லது 4 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.கே.சிங் கூறும்போது, “இங்கு இந்த மாதம் மட்டும் 290 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் 213 குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவிலும் 77 குழந்தைகள் மூளைக்காய்சல் சிகிச்சை பிரிவிலும் இறந்தன. கடந்த ஜனவரி முதல் இங்கு 1,250 குழந்தைகள் இறந்துள்ளன. பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு கொண்டு வரப்படுகின்றன. முன்னதாகவே கொண்டுவரப்பட்டால் பல குழந்தைகளை காப்பாற்ற முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x