Last Updated : 13 Aug, 2017 12:16 PM

 

Published : 13 Aug 2017 12:16 PM
Last Updated : 13 Aug 2017 12:16 PM

சுதந்திர தின விழாவை வீடியோவில் பதிவு செய்ய உத்தரவு: உ.பி. அரசுக்கு மதரஸாக்கள் கடும் எதிர்ப்பு

உத்தரபிரதேசத்தில் அனைத்து மதரஸாக்களும் சுதந்திர தின விழா கொண்டாடவும் அதை வீடியோவில் பதிவு செய்யவும் அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு மதரஸாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உ.பி.யில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 8,000 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் 560 மதரஸாக்கள் முழுமையாக உ.பி. அரசின் நிதியுதவியில் செயல்படுகின்றன. இந்த 560 மதரஸாக்கள் தவிர மற்றவற்றில் கடந்த பல ஆண்டுகளாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடப்படுவதில்லை என புகார் நிலவுகிறது. மேலும் இந்த விழாக்களை கொண்டாடும் மதரஸாக்களில் தேசிய கீதம் (ஜன கன மன...) பாடாமல், அல்லாமா இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான்சே அச்சா…’ மட்டும் பாடப்படுவதாக புகார் உள்ளது. இதையொட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பிறப்பித்த உத்தரவு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இதுகுறித்து உ.பி. அரசின் மதரஸா கல்வி வாரியம் பிறப்பித்த உத்தரவில், “மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து மதரஸாக்களிலும் காலை 8 மணிக்கு தொடங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட வேண்டும். இதில் கொடியேற்றத்துக்கு பிறகு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செய்து, விளையாட்டுப் போட்டிகளுடன், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, இறுதியில் இனிப்பு வழங்கப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி முழுவதையும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவ் மாவட்ட மதரஸா நிர்வாகக் கமிட்டி தலைவர் அர்ஷத் நோமானி கூறும்போது, “நம் நாட்டு மதரஸாக்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. இவற்றின் உலமாக்களில் பலரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஒவ்வொரு மதரஸாவும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுகின்றன. மற்ற கல்வி நிறுவனங்களை போலவே விளையாடுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பல்வேறு மாநில உடைகளை மாணவர்கள் அணிந்துவரச் செய்வதன் மூலம் தேசிய ஒற்றுமை வலியுறுத்தப்படுகிறது. இறுதியில் அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மதரஸாக்களின் தேசப்பற்று மீது சந்தேகப்பார்வை வீசும் வகையில் உ.பி. அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அளித்திருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கது.

ஆனால் மதரஸாக்களுக்கு மட்டும் உத்தரவிட்டிருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் இந்த விழாக்களுக்கு என தனியாக நிதி எதுவும் மாநில அரசு அளிப்பதில்லை. எனவே இந்த உத்தரவை நாங்கள் கண்டிக்கிறோம்” என்றார்.

தொடக்க காலத்தில் உ.பி.யின் இந்துக்களும் முஸ்லிம்களுடன் இணைந்து மதரஸாக்களில் கல்வி கற்று வந்தனர். காலப்போக்கில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களால் அவை முஸ்லிம்களுக்கு மட்டும் என மாறிவிட்டது. எனினும் இன்றும் கூட உ.பி. மற்றும் பிஹாரில் சில மதரஸாக்களில் இந்து மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் உ.பி. அரசின் உத்தரவின்படி பல மதரஸாக்கள் சர்ச்சையில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதை உ.பி. அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சவுத்ரி லஷ்மி நாராயண் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “இதுபோன்ற உத்தரவுகள் மதரஸாக்களுக்கு கடந்த காலங்களிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நவீனகால புதிய தலைமுறையும நம் சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறியச் செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிவான வீடியோக்கள் மூலம், சிறந்த நிகழ்ச்சிகள் தேர்வு செய்யப்பட்டு அவை மற்ற மதரஸாக்களில் திரையிடப்படும். அனைத்து மதரஸா மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x