

முத்தலாக் நடைமுறை முஸ்லிம்களால் 1400 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. மத நம்பிக்கை அடிப்படையிலான இந்த வழக்கத்தை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களை விவா கரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கு எதிராக வாதிடுவோருக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
முத்தலாக் நடைமுறையை ஆதரித்து வாதிடுவோருக்கும் மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணையின் நான்காம் நாளான நேற்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) சார்பில் மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
‘முஸ்லிம்கள் பின்பற்றும் தனிநபர் சட்டம் என்பது ‘அரசால் அமல்படுத்தப்படும் சட்டம்’ என்ற பிரிவின் கீழ் வராது என்று நரசு அப்பா மல்லி வழக்கு மற்றும் கிருஷ்ணா அகிர் வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சட்டத்தில் உள்ள இந்த அடிப்படை அம்சங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடவில்லை. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 371ஏ-ன் கீழ் நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநில மத நடவடிக்கைகளுக்கு எப்படி சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அதுபோன்ற நடைமுறை தான் தனிநபர் சட்ட நடைமுறை. தனிநபர் சட்ட நடைமுறை என்பது அரசிய லமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப் பட்ட ஒரு நடைமுறை. அரசியல் சாசனம் உருவாக்கியவர்களின் நோக்கமும் அதுதான்’ என்று வாதிட்டார்.
‘முத்தலாக் நடைமுறை 637-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதை முஸ்லிம் மதத்திற்கு எதிரானது என்று சொல்ல நாம் யார்? முஸ்லிம்களால் இந்த வழக்கம் 1400 ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. இது மத நம்பிக்கையில் அமைந்த ஒரு வழக்கம். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது ஒரு மத நம்பிக்கை. அதுபோன்ற ஒரு மத நம்பிக்கை தான் முத்தலாக். இதில் சட்டத்துக்கு வேலையில்லை. இறை தூதர் முகமதுவின் போதனைகள் இடம்பெற்றுள்ள ஹாதித் நூலிலும் முத்தலாக் இடம்பெற்றுள்ளது.
மத நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. இதில், சட்ட நெறி மீறல் என்று சொல்வதற்கோ, சம உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், ‘நிக்காநாமா’ என்ற பெயரில் முஸ்லிம்களின் திருமணம் என்பது இரண்டு நபரிடையே ஏற்படும் ஒரு மனப்பூர்வமான ஒப்பந்தம். விவாகரத்தும் அதைப் போன்றது தான். இரண்டுமே இரு நபர்களிடையே நடைபெறும் ஒப்பந்தம் என்கிறபோது அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?’ என்று கபில் சிபல் வாதிட்டார்.
இவ்வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நடந்தபோது, முத்தலாக் நடைமுறை ரத்து செய்யப்பட்டால், மத்திய அரசு உடனே சட்டம் கொண்டு வந்து மாற்று ஏற்பாடு செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி தெரிவித்திருந்தார். இதுகுறித்து வாதிட்ட கபில் சிபல், ‘முத்தலாக் நடைமுறை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டால் என்ன நடக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, ‘வாட்ஸ்ஆப்’ மூலம் குறுஞ்செய்தி அனுப்பி விவாகரத்து செய்யும் இ-தலாக் நடைமுறை குறித்து அகில இந்திய தனிநபர் சட்ட வாரியம் தனது கருத்தைப் பதிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.