Published : 27 Aug 2017 08:11 AM
Last Updated : 27 Aug 2017 08:11 AM

குர்மீத் ராமை சிக்க வைத்த பெண் துறவியின் கடிதம்: 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பினார்

தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம், சிர்ஸாவில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் துறவி ஒருவர் கடந்த 2002-ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய், பஞ்சாப்-ஹரியாணா தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் தனது கண்ணீர் கதையை விவரித்திருந்தார்.

“நான் பஞ்சாபை சேர்ந்தவள். எனது குடும்பத்தினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தர்கள். அவர்களின் விருப்பத்தின்பேரில் நான் சிர்ஸா ஆசிரமத்தில் பெண் துறவியானேன்.

ஆசிரமத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம் ரஹீம் சிங் வசித்தார். ஒருநாள் காலை 10 மணிக்கு என்னை, தன்னுடைய அறைக்கு வரவழைத்தார். அறைக் கதவை திறந்தபோது அவர் படுக்கையில் அமர்ந்திருந்தார். தொலைக்காட்சி பெட்டியில் ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்தது. அவரது தலையணை அருகே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இந்த காட்சிகளைப் பார்த்ததும், சுவாமி குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்படிப்பட்டவரா என்று திகைத்துப் போனேன்.

அப்போது அவர், என்னை தனக்கு விருப்பமான பெண் துறவியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறினார். அத்தோடு நிற்காமல் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.

நான் மறுப்புத் தெரிவித்தேன். ‘கடவுள்’ என்று கூறும் நீங்கள், இத்தகைய இழிவான செயலில் ஈடுபடலாமா என்று கேள்வி எழுப்பினேன். அதற்குப் பதிலளித்த அவர், பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தனர். அவர்களோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? என்றார்.

அவரது விளக்கத்தை நான் ஏற்காததால் என்னை மிரட்டத் தொடங்கினார். ஆசைக்கு இணங்காவிட்டால் என்னையும் எனது குடும்பத்தினரையும் ஆசிரமத்தில் இருந்து தூக்கி எறிவேன் என்று அச்சுறுத்தினார். அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அவரது அத்துமீறல் தொடர்ந்தது. நான் மட்டுமல்ல. என்னோடு தங்கியிருந்த சக பெண் துறவிகளையும் பலாத்காரம் செய்தார்.

அவர்களில் பலர் திருமண வயதை கடந்தவர்கள். அவர்களால் ஆசிரமத்தை விட்டு தப்பிச் செல்ல முடியவில்லை. அவரது விருப்பத்துக்கு இணங்காத பெண்களை துன்புறுத்துகின்றனர். 40 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.

எனது பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டால் நான் கொல்லப்படுவது உறுதி. எனக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்தால் உண்மையை கூறத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினால் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும்”

இவ்வாறு பெண் துறவி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. 15 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் குர்மீத் ராம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x