தலாக் முறை செல்லாது என அறிவித்தால் மாற்று சட்டம் நிறைவேற்றத் தயார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

தலாக் முறை செல்லாது என அறிவித்தால் மாற்று சட்டம் நிறைவேற்றத் தயார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
Updated on
1 min read

இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படும் வாய்மொழியாக மூன்று முறை தலாக் என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் நடைமுறையை செல்லாது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவித்தால் மாற்று ஏற்பாடாக சட்டம் நிறைவேற்றத் தயார் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வாய்மொழியாக மூன்று முறை தலாக் என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் நடைமுறை இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து ஷாயரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இதுதவிர, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, இம்மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை இன்று (திங்கள்கிழமை) விசாரித்த உச்ச நீதிமன்றம், "தலாக் முறை செல்லாது என அறிவிக்கப்பட்டால் முஸ்லிம் ஆண்கள் தங்கள் திருமணத்தை ரத்து செய்ய என்னதான் வழி?" என வினவியது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படும் வாய்மொழியாக மூன்று முறை தலாக் என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் நடைமுறையை செல்லாது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அறிவித்தால் மாற்று ஏற்பாடாக சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது. முஸ்லிம் சமூகத்தினரின் திருமணத்தையும் விவாகரத்து முறையையும் ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் இயற்றப்படும்" என்றார்.

முத்தலாக் முறைக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய வாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in