Published : 09 Aug 2017 09:09 AM
Last Updated : 09 Aug 2017 09:09 AM

ராகுல் கார் மீதான தாக்குதல் விவகாரம்: காங். அமளியால் மக்களவை ஒத்திவைப்பு - பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

குஜராத்தில் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து காங்கிரஸார் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதேநேரம் பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல் மீறியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இதனால் மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மக்களவை நேற்று காலையில் கூடியதும், ராகுல் காந்தி மீதான தாக்குதல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்) பேச முற்பட்டார். பொதுவாக கேள்வி நேரத்தின்போது மற்ற பிரச்சினை பற்றி பேச மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதிப்பதில்லை. எனினும், இதுபற்றி பேச கார்கேவுக்கு அனுமதி அளித்த மகாஜன், இதை முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது என்றார்.

அப்போது, கார்கே பேசும்போது, “குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பனஸ்கந்தா மாவட்டத்துக்கு ராகுல் சென்றிருந்தார். அப்போது அவரது கார் மீது சிலர் தாக்கதல் நடத்தி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை.

காஷ்மீரில் போராட்டத்தின்போது கல் எறியும் செயலில் ஈடுபடுவோர் தீவிரவாதிகள் என அரசு கூறுகிறது. அப்படியானால் ராகுல் கார் மீதான தாக்குதல் எந்த வகையான தீவிரவாதம்? அவர்கள் காஷ்மீரிலிருந்து வந்தார்களா? அல்லது குஜராத் பாஜக தொண்டர்கள் தீவிரவாதிகளாக மாறிவிட்டார்களா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் பேசும்போது, “பாஜக தொண்டர்களை தீவரவாதிகளுடன் ஒப்பிடுவது தவறு. இதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “ராகுல் காந்தி தேசிய தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குஜராத் சென்ற அவர், தனது செயலாளரின் ஆலோசனைப்படி சாதாரண காரில் பயணம் செய்துள்ளார். குண்டு துளைக்காத காரில் செல்ல வேண்டும் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் (எஸ்பிஜி) ஆலோசனையை நிராகரித்துள்ளார். இதன்மூலம் பாதுகாப்பு விதிமுறைகளை அவர் மீறி உள்ளார்.

எனினும், ராகுல் கார் மீது கல் எறிந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் தனது சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுப்பார். இதனால், அவர்களால் ராகுலுடன் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.

எனவே, தனது எஸ்பிஜி வீரர்களை புறக்கணித்துவிட்டு ராகுல் எங்கு செல்கிறார், எதை மறைக்கப் பார்க்கிறார் என்பதை தெரிந்துகொள்ள நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.

மேலும் குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் விஜய் ருபானி பார்வையிட்டார். அப்போது அவருக்கு எதிராக யாரும் கோஷம் எழுப்பவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லை. அப்படி இருக்கும்போது, ராகுலுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பதை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

அமைச்சரின் பதிலில் திருப்தியடையாத காங்கிரஸார் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கோஷம் எழுப்பினர். இதனால் அமளி நிலவியதால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x