Last Updated : 27 Aug, 2017 08:17 AM

 

Published : 27 Aug 2017 08:17 AM
Last Updated : 27 Aug 2017 08:17 AM

‘பாபாக்கள்’ உலகைப் புரிந்து கொள்ள முடியாது

‘ந

ம் நாட்டின் எந்தப் பகுதியில் சதுர மைலுக்கு அதிக பாபாக்கள் வசிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினால், சமீபத்திய பஞ்சாப்-ஹரியாணா வன்முறைச் சம்பவ செய்திகளைப் படிக்காமல் இருந்தால் திணறியிருப்பீர்கள்; இப்போது புரிந்திருக்குமே அது பஞ்சாப், ஹரியாணா என்று! இவ்விரு மாநிலங்களும் வேளாண் செழிப்பு, பாசன வசதிகள், வீரம், விளையாட்டு, தொழில் வளர்ச்சி என்று பலவற்றுக்குப் புகழ் பெற்றிருந்தாலும் தங்களைத் தாங்களே ‘பாபா’ என்று அழைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கைக்காகவும் பெயர் போனவை.

எல்லா பாபாக்களுமே மோசமானவர்கள் அல்ல; சிலர் உண்மையிலேயே ஆன்மிக சித்தாந்தங்களை உருவாக்கியவர்கள், சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், அறச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், மக்களுக்கு சேவை செய்பவர்கள். எஞ்சியவர்களில் பெரும்பாலானவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்கள், அரசியல் தரகர்கள், அதிகாரத் தரகர்கள், நிழல் உலக தாதாக்கள். ஷோலே திரைப்படத்தில் வரும் கப்பர் சிங்கைப்போல கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள். உள்ளூர் அரசியல்வாதிகள், ‘அரே ஓ சம்பா…’ என்று பாபா கூப்பிட்டதுமே ஓடிச் சென்று ஏவல் செய்வார்கள். இப்படி நூறல்ல, ஆயிரமல்ல, லட்சக்கணக்கான சீடர்களைக் கொண்ட பாபாக்களும் இருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வு குற்றத்துக்காக ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, அதே போன்ற இன்னொரு வழக்கின் விசாரணையில் சிக்கியிருக்கிறார் பாபா; அவருடைய குற்றச் செயல்களை அம்பலப்படுத்தியதற்காக ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுவிட்டார்; முக்தி அளிக்கிறேன் என்று கூறி 400 சீடர்களைச் சீரழித்துள்ளார் பாபா.

நாம் இப்போது அறிய வேண்டியது அதிக சீடர்களைக் கொண்டுள்ள பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் இன்சான் பற்றி. சிர்சா என்ற ஊரில் அவர் தங்கியிருக்கும் ஆசிரமத்தை ‘டேரா’ என்று அழைக்கின்றனர். அது குட்டி நகரம். அதற்கு அருகிலேயே ஹிசார் நகரில் இன்னொரு டேரா இருக்கிறது, அதன் பாபா, ராம் பால். அவரும் சிறையில்தான் இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் ஆயுள் முழுக்க அங்குதான் இருப்பார். 2014 நவம்பரில் ஹரியாணா காவல்துறையினர் அவருடைய ஆதரவாளர்களுடன் சண்டையிட்டு, கோட்டை போன்ற ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அவரைக் கைது செய்வதற்குள் பலருடைய தலைகள் உருண்டன. ராம் பாலின் கமாண்டோக்களைக் காவல்துறை எதிர்கொள்ள நேரிட்டது என்று ஹரியாணா காவல்துறைத் தலைவர் எஸ்.என். வசிஷ்ட் அச் சம்பவத்தை விவரித்தார்.

இந்த டேரா அல்லது பிரிவுகளில் பொதுவான அம்சம், பாபாவை மையமாகக் கொண்ட பக்தி அல்லது விசுவாசம். ஹிசாரிலிருந்து சிர்சா வரை மேற்காக விழிகளை உருட்டினால், பஞ்சாபின் எட்டு மாவட்டங்களில் இவ்விரு பாபாக்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான சீடர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய தலைகளுக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டம் எப்போது மங்குகிறது அல்லது மறைகிறது என்றால் இன்னொரு பாபாவுக்கு செல்வாக்கு கூடும்போது. எல்லா பாபாவுமே போக்கிரிகள் அல்ல, சிலர் வாழும்போதும் சாகும்போதும் சுவாரசியத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்.

ராதா சுவாமி, நிரங்காரி

பஞ்சாபில் ராதா சுவாமி, நிரங்காரி என்று இரண்டு வழிபாட்டுப் பிரிவுகள் பிறந்து பிற மாநிலங்களிலும் சீடர்களைப் பெற்றுள்ளன. ராதா சுவாமி என்ற பிரிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியதில்லை. அதன் இப்போதைய தலைவரான பாபா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் மதப்பிரிவுகளின் தலைவரை பாபா என்று அழைப்பதே பாதுகாப்பானது. ‘குரு’ என்று யாரையும் லேசில் அழைத்துவிட முடியாது, அது மத நிந்தனையாகிவிடும். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், நான்தான் கடைசி, உங்களுக்கெல்லாம் குரு நமது ‘கிரந்த சாஹிப்’ (மத நூல்) தான் என்று அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ராதா சுவாமியின் தலைநகரம் பியாஸ் நதிக்கரையில் ஜலந்தருக்கும் அமிர்தசரஸுக்கும் நடுவில் உள்ளது. பரம்பரையான வாரிசு யாரும் இல்லை. சுமுகமாக அடுத்த பாபாவைத் தேர்வுசெய்ய விரும்புகின்றனர். ரன்பாக்ஸி/ரெலிகேர்/ ஃபோர்டிஸ் தொழிலதிபர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாய் சிவஇந்தர் மோகன் சிங்கை பாபாவாக்க முயற்சிகள் நடக்கின்றன. அவருடைய சகோதரர்தான் மால்விந்தர் மோகன் சிங். டெல்லிக்காரர்கள் இவர்களைக் குறும்பாக ‘எம்எம்எஸ்-எஸ்எம்எஸ்’ பிரதர்ஸ் என்பார்கள்.

நிரங்காரிகளுடைய வரலாறு இன்னும் சுவாரசியமானது. அதிக காலம் பாபாவாக இருந்த குர்பச்சன் சிங்கை, ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் ஆட்கள் சுட்டுக்கொன்றனர். காரணம், அவர் தன்னை ‘குரு’ என்று கூறிக் கொண்டாராம். 1978 ஏப்ரல் 13-ல் பிந்தரன்வாலேயின் ஆதரவு அமைப்பு தோன்றி பிறகு வளர்ந்தது. நிரங்காரிகளின் மத மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பிந்தரன்வாலேயின் சீடர்கள் சென்றனர். பிறகு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 16 பேர் இறந்தனர். நிரங்காரிகளுடன் மற்றவர்கள் எந்தவிதத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று பொற்கோவிலில் இருக்கும் சீக்கியர்களின் தலைமைப் பீடம் அகால் தக்த், ஹூகம்நாமா என்ற கட்டளையைப் பிறப்பித்தது. பஞ்சாபியர்கள் இதை ‘ரோட்டி-பேட்டி கா சம்பந்த்’ தடை செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அதாவது அவர்களுடைய வீடுகளில் கை நனைப்பதும், பெண் எடுப்பதும் கூடாது.

நாம்தாரிகள்

இன்னொரு பிரிவினர் நாம்தாரிகள். வெள்ளைத் தலைப்பாகை அணியும் இவர்கள் நட்புணர்வு மிக்கவர்கள். அவர்களுடைய கடைசி தலைவர் ஜகஜீத் சிங்குக்கு மகன் இல்லை. உறவினர் மகனான உதய் சிங்கை வாரிசாக அறிவித்தார். உதய் சிங் தன்னுடைய அம்மா சாந்த் கௌர் உதவியோடு நாம்தாரிகளை வழிநடத்தினார். 2016 ஏப்ரல் 4-ல் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கியாள்கள் பாபா சாந்த் கௌரை சுட்டுக்கொன்றனர். உதய் சிங்கும் அவருடைய இன்னொரு உறவினரும் இந்தக் கொலை தொடர்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இந்த அமைப்புகளிலேயே சிறியது, ஆனால் நெருக்கமான பிணைப்புகளைக் கொண்டது பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டத்தில் நூர்புர் பேடி என்ற இடத்தில் உள்ள பணியாரா பாபா ஆசிரமம். மறைந்த காங்கிரஸ் தலைவர் பூட்டா சிங் இந்த பாபாவின் தீவிர பக்தர். பாபாவின் அற்புதங்கள்தான் தன் மனைவியைக் காப்பாற்றியது என்று பூட்டா சிங் நம்பினார். 2001-ல் அந்த பாபா, ‘பவசாகர் கிரந்த்’ என்ற நூலில் தன்னுடைய அற்புதங்களைப் பட்டியலிட்டார். இதை மற்ற சீக்கியர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஹரியாணாவில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது பப்பர் கால்சா ஆதரவாளர் ஒருவர், பணியாரா பாபாவைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார்.

‘ஃப்ரீசர் பாபா’

இறுதியாக வருகிறார் ‘ஃப்ரீசர் பாபா’. பிஹாரைச் சேர்ந்த ஆசுதோஷ் பாபாவானார். அவருக்கு லட்சக்கணக்கான சீடர்கள் சேர்ந்தனர். 2014 ஜனவரியில் அவர் இறந்துவிட்டார். ஆனால், ‘அவர் இறக்கவில்லை - சமாதியில்தான் இருக்கிறார்’ என்று ஆதரவாளர்கள் கருதுகின்றனர். எனவே அவர் மீண்டும் எழுந்து நடமாடுவார் என்ற நம்பிக்கையில் தகனம் செய்ய மறுத்து, ஃப்ரீசரில் வைத்திருக்கின்றனர். அவரைத் தகனம் செய்ய கோரும் வழக்கு உயர் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடக்கிறது. தகனம் செய்யுமாறு ஒற்றை நீதிபதி ஆணையிட்டார். கூடாது என்று ‘பெஞ்ச்’ அந்த ஆணையை ரத்து செய்துவிட்டது. ஆசுதோஷ் பாபா வந்துவிடுவார் என்று சீடர்கள் அவர் கண் விழித்து எழுந்திருக்கக் காத்திருக்கின்றனர்.

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதிகளில் மட்டும் ஏன் பாபாக்கள் அதிகம் இருக்கின்றனர் என்று சமூகவியலாளர்கள் கேட்கின்றனர். பலர் பல காரணங்களைக் கூறுகின்றனர். உலகிலேயே மிகவும் இளைய மதம் சீக்கியம்தான். தோன்றி 500 ஆண்டுகள் ஆகின்றன. அது இன்னமும் ‘வளர்சிதை’ மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கிறது. சீக்கிய மதத்துக்குக் கடவுள், குரு எல்லாம் அதன் புனித நூல்தான். கிரந்த சாஹிப்பில் உள்ளபடிதான் நடக்க வேண்டும். இந்த பாபாக்கள் மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளை மூன்று வழிகளில் தீர்க்கின்றனர். வழிபாட்டையும் மதக் கடமைகளையும் எளிதாக்கிவிடுகின்றனர். சீக்கியர்கள் – இந்துக்கள் இருவரையும் ஒருசேர ஈர்க்கும் விதத்தில் இவர்களுடைய ஆசிரம நடைமுறைகள் இருக்கின்றன. பாபாக்களின் வழிமுறைகள் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கலப்பின ரகமாக இருக்கிறது! புனித நூலில் பல விஷயங்கள் இருக்கலாம். ஏதாவது பிரச்சினை அல்லது குழப்பம் நேரும்போது மனதுக்கு ஆறுதல் தரவும் வழிகளைக் காட்டவும் ஒருவர் தேவைப்படுகிறார். அவர் பாபாவாக இருக்கும்போது சீடர்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது.

வியாபார உத்தி தெரிந்தவர்கள்

பாபாவாகிறவர்கள் நல்ல வளமான வியாபார உத்தி தெரிந்தவர்கள். அவர்களுடைய ஆசிரமங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நிம்மதியாக சாப்பிட்டு ஆடி, பாடி, உற்சாகம் அடைய எல்லா வசதிகளுடன் திகழ்கின்றன. பாபாக்களின் புகழைப் பாடும் திரைப்படங்கள், பாடல் கேசட்டுகள் மிக எளிதாக அவர்களைப் பிரபலப்படுத்துகின்றன. அவர்களுடைய ஆடை அலங்காரங்கள், நகைகள், வாகனங்கள், செல்வ வளம் சீடர்களை வியக்க வைக்கின்றன. ராம் ரஹீம் பாபா மிகுந்த ஆடம்பரவாசி. எனவே சீடர்களுக்குப் பிடிக்கும். அவர் தவறே செய்யமாட்டார் என்பதே சீடர்களின் நம்பிக்கை. நிரங்காரிகளுக்கு எதிராக மதக் கட்டளை பிறப்பித்த சீக்கியர்களின் உயர் மத அமைப்பான அகால் தக்த், 35 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் ரஹீம் பாபாவுக்கு எதிராகவும் கட்டளை பிறப்பித்தது. அவருடனும் அவரை ஆராதிப்பவர்களுடனும் ‘‘ரோட்டி-பேட்டி கா சம்பந்த்’ தொடர்புகள் கூடாது என்று தடை செய்திருக்கிறது. அவருடைய ஆதரவாளர்களுடைய வாக்குகள் கிடைக்கும் என்ற ஆசையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசு அவர் விடியோ மூலம் மன்னிப்பு கோரியதை ஏற்குமாறு அகால் தக்திடம் பரிந்துரைத்தன. இதை மதத்தில் பிடிப்புள்ள சீக்கியர்கள் கடுமையாக எதிர்த்தனர். சி.பி.ஐ. வழக்கிலிருந்து தப்ப உதவும் என்ற நம்பிக்கையில், அகாலி-பாஜக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு ராம் ரஹீம் பாபா கட்டளையிட்டார். ஆனால் பஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் வென்றது. பாபா மீதான ஒரு வழக்கில் விசாரணை முடிந்து இப்போது தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பாபாக்களின் வாக்கு வங்கிகளும் அரசியல் கட்சிகளின் பேராசைகளும்தான் பஞ்சாப், ஹரியாணா அரசுகளின் சாபக்கேடாக விளங்குகின்றன. இதை முதலில் தொடங்கி வைத்தது காங்கிரஸ். அதனிடம் கற்றுக்கொண்டது பாஜக. டேராக்களை ஆதரித்து அகாலிகள் தொடர்ந்து இருமுறை ஆட்சி செய்தனர். ராம்சந்தர் சத்தர்பதி என்ற துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்தான் பாபாவின் பாலியல் வன்புணர்வு குற்றத்தை அம்பலப்படுத்தியவர். அதற்காகவே அவரைச் சுட்டுக்கொன்றனர். நாட்டின் எந்த சட்டத்துக்கும் தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று பாபாக்கள் நினைக்கின்றனர். சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் நெஞ்சுரம் மிக்கவர். பாபாவாக இருந்தாலும் சரி, குற்றம் குற்றமே என்று தீர்ப்பளித்துவிட்டார்.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘திபிரிண்ட்’ தலைவர், தலைமை ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x