Published : 19 Aug 2017 10:02 AM
Last Updated : 19 Aug 2017 10:02 AM

தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி: காஷ்மீர் தொழில் அதிபருக்கு10 நாள் என்ஐஏ காவல்

காஷ்மீரில் வன்முறைச் செயல்களுக்கு நிதி திரட்டப்பட்ட வழக்கில் காஷ்மீர் தொழில் அதிபர் ஜஹூர் அகமது வதாலியை 10 நாட்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

டெல்லியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட வதாலியை மாவட்ட நீதிபதி பூணம் ஏ பம்பா முன்னிலையில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 2 வாரங்களுக்கு தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வதாலியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டி உள்ளது என்றும் என்ஐஏ அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, வதாலியை 10 நாட்களுக்கு என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

காஷ்மீரில் பிரபல தொழிலதிபரான வதாலி, அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடையவர். காஷ்மீரில் வன்முறையை அரங்கேற்றுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று, அதை தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு அனுப்பியதில் வதாலி முக்கியப் பங்கு வகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஷ்மீரில் ஸ்ரீநகர், ஹண்டுவாரா, குப்வாரா, பாரமுல்லா ஆகிய இடங்களில் வதாலியின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் என்ஐஏ கடந்த புதன்கிழமை திடீர் சோதனை நடத்தியது. இதில் தீவிரவாதத்துக்கு நிதி திரட்டியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக என்ஐஏ கூறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x