

கடந்த 1990-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு 23 வயது. அதற்கு முன்பே அவருக்கு திருமணமாகி விட்டது. அவரது மனைவி ஹர்ஜித் கவுர். இத்தம்பதிக்கு சரண்பிரீத், அமன்பிரீத் என்ற மகள்களும் ஜஸ்மீத் என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கும் மகனுக்கும் திருமணமாகிவிட்டது.
ஹரியாணாவின் சிர்ஸா நகரில் உள்ள தலைமை ஆசிரமத்தில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மகள்களும், மகனும் தந்தையோடு அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆனால் மனைவி ஹர்ஜித் கவுர் மட்டும் ஆரம்பம் முதலே வெளிஉலகில் தலைகாட்டவில்லை.
ஆசிரமத்தில் அவர் எங்கு தங்கியிருக்கிறார். பிரார்த்தனைகளில் பங்கேற்பாரா என்பன போன்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. வெகுஅரிதாகவே சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.
பாலியல் வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிர்ஸா ஆசிரமத்தின் தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் பாபாவின் வளர்ப்பு மகளான ஹனி பிரீத்துக்கும் பாபாவுக்கு மிகவும் நெருக்கமான பெண் துறவியான விபாசனாவுக்கும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் பாபாவின் மனைவி, குடும்பத்தினர் குறித்து எவ்வித தகவலும் இல்லை. பாபா நீதிமன்றத்தில் ஆஜரானபோதும் சிறைக்குச் சென்றபோதும் வளர்ப்பு மகளான ஹனி பிரீத் மட்டுமே உடன் சென்றார். குடும்பத்தினர் யாரும் வரவில்லை. பாபாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது ஊடகங்களில்கூட குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கவில்லை. பாபாவின் மனைவி எங்கிருக்கிறார் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் விதிகளின்படி பாபாவின் குடும்பத்தினர் தலைமை பொறுப்பை ஏற்கக்கூடாது என்பதால் அவரது மகனோ, மகள்களோ தலைமை பதவிக்கு வர முடியாது. இதுகுறித்து சிர்ஸா ஆசிரம வட்டாரங்கள் கூறியபோது, இப்போதைக்கு புதிய தலைமை குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்தன.