மத்தியப் பிரதேசம்: பள்ளி அருகே அமோனியா கசிவு; 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு அருகே இருந்த குளிரூட்டப்பட்ட கிட்டங்கியிலிருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதில் பாதிப்படைந்த 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நரசிங்கபுர சாலையில் அமர்ந்துள்ள இந்த குளீரூட்டப்பட்ட கிட்டங்கியிலிருந்து அமோனியா கசிந்த போது பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் இருந்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து மாவட்ட கலெக்டர் கே.ஜெயின் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
“பாதிக்கப்பட்ட 50 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவச் சோதனை முடிந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியிலிருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளோம், விசாரணைகு உத்தரவிட்டுள்ளோம், குளிரூட்டப்பட்ட கிட்டங்கி உரிமையாளரை விசாரணை செய்து வருகிறோம்” என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெய்ன்.
புதன்கிழமை காலை காலை வழிபாட்டுக்காக மாணவர்கள் கூடிய போது பைப்லைனிலிருந்து 10.15 மணியளவில் அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது.
கிட்டங்கியில் உள்ள சிலிண்டர் ஒன்று வெடித்ததனால் அமோனியா வாயு வெளியானதாக மாவட்ட ஆட்சியர் ஜெயின் தெரிவித்தார்.
தற்போது சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
