Published : 07 Aug 2017 12:10 PM
Last Updated : 07 Aug 2017 12:10 PM

பெங்களூருவில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அகமதாபாத் திரும்பினர்- மீண்டும் ரிசார்ட்டில் தங்க வைப்பு

குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு, பெங்களூருவில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று(திங்கட்கிழமை) காலை 5 மணியளவில் அகமதாபாத் வந்தடைந்தனர்.

அகமதாபாத்தை அடைந்த எம்எல்ஏக்கள் உடனே அனந்த் மாவட்டத்தில் உள்ள நிஜானந்த் என்னும் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைவர் அமித் ஷா, அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் தரப்பில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் களத்தில் உள்ளார். அவர் வெற்றி பெற 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

இதில் பாஜக வேட்பாளர்கள் மூவரும் வெல்லும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக, கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதாக குதிரை பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தனர். அவர்களில் பாஜகவில் இணைந்த பல்வந்த் சிங், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், எம்பி டி.கே.சுரேஷ், எம்எல்சி ரவி மேற்பார்வையில் பெங்களூரு அருகேயுள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டிஜிபி, தங்கள் எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டி கர்நாடக காவல்துறையிடம் கேட்டிருந்தார். இதனையடுத்து, அகமதாபாத் விமானத்தில் ஏறும்வரை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

’கட்சிக்கு விசுவாசமானவர்கள்’

இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சைலேஷ் பர்மார், ''இந்த ரக்‌ஷா பந்தன் நாளிலும் எங்களின் அனைத்து எம்எல்ஏக்களும் தங்களின் வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். அவர்கள் கட்சிக்கு விசுவாசமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் வரை ஒன்றாகவே இருப்பர்.

சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் விரைவில் எம்எல்ஏக்களைச் சந்திக்க உள்ளார்'' என்றார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் குஜராத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x