சிறுபான்மை மக்கள் ஒரு பொருட்டா என்ன?

சிறுபான்மை மக்கள் ஒரு பொருட்டா என்ன?
Updated on
3 min read

கு

டியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து முகம்மது ஹமீது அன்சாரி ஓய்வுபெற்ற பிறகு இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சியின் உயர் பதவியில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டு விடவில்லை. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறைகளின் அமைச்சர் என்று எந்தப் பதவியையுமே சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஒருவர் கூட வகிக்காத நிலை இதற்கு முன் இருந்ததே இல்லை.

நரேந்திர மோடி அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோழமைக் கட்சியான அகாலி தளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் என்ற பெண் மட்டுமே உணவு பதப்படுத்தல் என்ற ‘முக்கியமான துறை’யை வகிக்கிறார்!

இணை அமைச்சர்கள் பட்டியலில் ஓரிருவர் தேறலாம். சிறுபான்மையினர் நலத்துறையில் தனிப்பொறுப்பு இணை அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வி இருக்கிறார். அவருடைய இலாகாவே ‘சிறுபான்மையினர் நலன்’தான். வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருப்பவர் எம்.ஜே. அக்பர்.

வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம். அம்மாநிலங்களில் செல்வாக்கை பாஜக வளர்த்து வந்தாலும் மத்திய அமைச்சரவையில் ஒரு கிறிஸ்தவர்கூட இல்லை. பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே சிறுபான்மை சமூகத்தவர் முதலமைச்சர்களாக இருக்கின்றனர்.

மோடி-அமித் ஷா வழிகாட்டலில் பாஜக வலுவான தேசியக் கட்சியாக இருக்கிறது. மத்தியில் உள்ள இரு இணை அமைச்சர்களைத் தவிர, ஷாநவாஸ் உசைன், எஸ்.எஸ்.அலுவாலியா, தேஜிந்தர் பால் பக்கா மட்டுமே கட்சியில் நன்கு அறிமுகமான சிறுபான்மை சமூகத்தவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் அதிகார அமைப்பில் முதல் முறையாக சிறுபான்மை சமூக மக்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பல்லாண்டு ஆட்சியில் நேருவின் எளிதான மதச்சார்பின்மை, இந்திரா காந்தி காலத்தில் நேரடியான சிறுபான்மை ஆதரவாக மாறியது. ராஜீவ் காந்தி காலத்தில் ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திருத்தப்பட்ட விதம் வரலாற்று நிகழ்வானது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் சுதந்திர சிந்தனையாளர்களே அதிருப்தி அடைந்தனர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவ அரசியலில் வளர்ந்தவரும் அப்போதைய மத்திய இணை அமைச்சருமான ஆரிஃப் முகம்மது கான், எதிர்ப்பைத் தெரிவிக்க வெளியேறினார். கட்டுப்பெட்டிகளான இந்துக்களுக்கு (பாஜக ஆதரவாளர்கள் அல்ல) இது வியப்பை ஏற்படுத்தியது. இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளையும் தவறான பழக்கங்களையும் மாற்ற சட்டமியற்றிய காங்கிரஸ் கட்சி, சிறுபான்மை சமூகத்தவர் என்று வரும்போது பின்வாங்குவதேன் என்று யோசித்தது. இதுதான் அத்வானி நுழைய இடம் தந்தது.

‘இந்தியா தன்னுடைய பங்களிப்பை மறு வரையறை செய்கிறது’ என்ற தலைப்பில் 1993-94-ல் கட்டுரை எழுதினேன். இந்திய அரசியலில் பாஜக அடுத்து வளர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்டது அது. தன்னுடைய அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய பிரதமர் வாஜ்பாய், “இதுவரை இருந்திராத ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது; பெரும்பான்மை சமூகமான இந்துக்கள் தாங்கள் அரசியல் செல்வாக்கற்றவர்களாக ஆகிவருவதாக நினைக்கின்றனர்; இதை விவாதிக்க வேண்டும்” என்றார். இப்படி பெரும்பான்மை சமூகத்தின் மனக்குமுறலை வெளிப்படுத்தியதற்குப் பரிசாக 1998-ல் ஆட்சியைப் பிடித்தார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதே மனக்குமுறலை வெளிப்படுத்தியதற்காக ஹமீது அன்சாரி கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். வாஜ்பாய் கூறியதைக் கூர்ந்து கேட்டதைப்போலவே இவருடைய பேச்சையும் நாம் கவனித்தாக வேண்டும். வாஜ்பாய் பேசியது சரியென்றால், அதற்குப் பிறகு நம்முடைய அரசியல் நடவடிக்கைகள் அந்தத் தவறை அளவுக்கு மீறி சரி செய்துவிட்டனவா? அப்படியானால் அன்சாரியின் கவலை நியாயமானதல்லவா?

இந்தக் கேள்வியை மிகச் சரியான ஜனநாயக நாடுகள் என்று கூற முடியாத மூன்று ஆசிய நாடுகள் எதிர்கொண்டன. 1993-ல் எனக்குப் பேட்டியளித்த ஷிமோன் பெரஸ், “வங்காள வரிகுடாவிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதி வரையில் உள்ள பரந்த நிலப் பரப்பில் இரண்டே இரண்டு நாடுகள்தான் – இந்தியா, இஸ்ரேல் - முஸ்லிம் சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை தருகின்றன” என்றார். சிறுபான்மையினத்தவர் முக்கியம், ஆனால் அவர்களுக்கு யூதர்களுக்குள்ள முழு ஜனநாயக உரிமைகளும் வாய்ப்புகளும் தரப்படவில்லை. மேற்குக் கரையில் உள்ள எல்லா பகுதிகளையும் இஸ்ரேல் தன்வசம் வைத்துக்கொண்டு எல்லா அராபியர்களுக்கும் வாக்குரிமையையும் கொடுத்தால் அதன்பிறகு அது யூத நாடாக இருப்பது முடிவுக்கு வந்துவிடும். அப்படியொரு வாக்குரிமையை அளிக்காவிட்டால் அது குடியரசு நாடாக இருக்கவே முடியாது. இஸ்ரேல் வினோதமான ஜனநாயக நாடு. அங்கே எல்லோருக்கும் வாக்குரிமை இருக்கிறது. ஆனால் சமத்துவம் கிடையாது.

அதன்பிறகு பாகிஸ்தானும் பெரஸ் கூறும் ஜனநாயக நாடுகள் பட்டியலில் இடம் பெறுகிறது. இஸ்ரேலைப் போலவே அதுவும் மத சித்தாந்தம் சார்ந்த நாடு. அதனால் அதே கேள்வியை எதிர்கொள்கிறது. சிறுபான்மை சமூக மக்களுக்கு சமமான அரசியல் உரிமைகள் தரப்பட்டால் அதை இஸ்லாமியக் குடியரசு என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா? பாகிஸ்தானை உருவாக்கியவர்கள், அரசியலில் காலனியாதிக்க அரசைப் போல சிறுபான்மை மக்களுக்கு தனித் தொகுதிகளை ஏற்படுத்தினார்கள். மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சராக தர்சன் லால் என்ற இந்து அமைச்சராகியிருக்கிறார். தரைப்படையில் முதல் முறையாக ஹர்சரண் சிங் என்ற சீக்கியர் அதிகாரியாகி இருக்கிறார். லான்ஸ் நாயக் லால் சந்த் ரபாரி என்பவர் இந்தியாவுக்கு எதிரான சண்டையில் உயிர் நீத்து முதல் தியாகியாகியிருக்கிறார். அதே நேரத்தில், பருவம் அடையாத இந்து பெண்களைக் கடத்தி மதம் மாற்றுவதை நியாயப்படுத்தும் அரசியல் தலைவர் கொண்டாடப்படுகிறார். இந்துக்களுக்கு எதிரான பழிவாங்கல்கள் தொடர்கின்றன.

முந்தைய காங்கிரஸ் - மதச்சார்பற்ற அரசுகள் சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாகத்தான் பயன்படுத்தின என்று இந்திய வலதுசாரிகள் சொல்வதில் உண்மை இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் இப்போது நிரூபிக்கப்பட்டதைப்போல அந்த வாக்கு வங்கி இப்போது ஒரு விஷயமே அல்ல. நம்முடைய அரசு அவர்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும், அவர்களுடைய சமூக நிலைமையை மேம்படுத்தும். ஆனால் அதிகாரத்தில் மட்டும் பங்குக்கு வராதே என்று கூறிவிடும்.. சிறுபான்மைச் சமூக மக்கள் ஒரு பொருட்டாக இருக்கமாட்டார்கள்.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரிண்ட்’ தலைவர்,

தலைமை ஆசிரியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in