கொடூரமாக சித்திரவதை செய்யப்படும் இளம்பெண், இளைஞர்: வைரலாக பரவும் வீடியோவில் சிக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொடூரமாக சித்திரவதை செய்யப்படும் இளம்பெண், இளைஞர்: வைரலாக பரவும் வீடியோவில் சிக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Updated on
2 min read

கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் ஒரு இளம்பெண்ணையும், ஆணையும் ஒரு கும்பல் ஆடைகளைக் களைந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 28-ம் தேதியிட்ட கோரிக்கையுடன் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ உலவி வருகிறது. கிராமத்தில் நடைபெறும் இந்தச் சம்பவத்தில் ஓர் இளைஞரையும், பெண்ணையும் ஒரு கும்பல் ஆடைகளைக் களைந்து கம்புகளால் அடித்து துன்புறுத்துகின்றனர்.

மேளதாளத்துடன் இருவரும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், இருவரையும் கம்பால் அடித்து கொண்டே செல்கின்றனர். பிறகு கும்பலின் உத்தரவுபடி அந்தப் பெண்ணை, இளைஞர் சிறிது தொலைவு தோளில் சுமந்து செல்கிறார்.

இதேபோல், அந்த ஆணை அப்பெண்ணும் தனது தோளில் அமர வைத்து தள்ளாடி சில அடிகள் எடுத்து வைக்கிறார். பிறகு நடக்க முடியா மல் அப்பெண் கீழே விழுந்து விடுகிறார். இதன் பிறகு இருவரும் கும்பலால் அடித்து உதைக்கப்படு கின்றனர்.

சுமார் 60 வயது கொண்ட ஒரு மூத்தவர் தலைமையில் நடைபெறும் இந்த கொடூரத்தில் 10 வயது முதல் நடுத்தர வயதுள்ளவர்கள் என சுமார் 20 பேர் கொண்ட கும்பல், ‘..ஆகே படாவ்(முன்னே நடக்க வையுங்கள்)..மாத்தா கீ ஜே..’ என கிராமத்து இந்தியில் கூக்குரல் இட்டு சந்தோஷப்படுகிறது. சுமார் இரண்டு நிமிடம் ஓடும் இந்த வீடியோ பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது. சித்திரவதை செய்பவர்கள் காட்டுமிரண்டிகளா? என எண்ண வைக்கிறது. இந்த கொடூர சம்பவத்தை சில சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வீடியோ எடுத்து மகிழ்வதையும் பார்க்க முடிகிறது.

ஒரே கிராமம் அல்லது கோத்ரம், சாதி, மதம் மாறி காதலிப்பவர்கள், திருமணம் செய்பவர்களை தேடிப் பிடித்து கவுரவக் கொலைகள் செய்யப்படுவது உத்தரபிரதேசத்தில் அதிகமாக உள்ளது. இவற்றை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புவதும் வாடிக்கையாக உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பும் உபியின் கிழக்கு பகுதியான மகராஜ்கன்சில் ஓர் இளம்பெண் பாலியல் சித்திரவதை செய்யப்படும் வீடியோ பரவி அங்கு ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு மீது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு முன்பாக இளம்பெண்களை வழிமறித்து பாலியல்ரீதியாக துன்புறுத் தப்படும் வீடியோவும் வெளியானது. இதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், தற்போதைய வீடியோவும் அம்மாநிலத்தில் நடந்திருக்க வாய்ப் புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, அந்த வீடியோவுடன் சம்பந்தப்பட்டவர் களை தேடிப் பிடித்து தண்டிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அரசை வலியுறுத்தும் தகவல் களும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலவ வைக்கும் துணிச்சல் எப்படி வந்தது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in