Last Updated : 08 Aug, 2017 09:44 AM

 

Published : 08 Aug 2017 09:44 AM
Last Updated : 08 Aug 2017 09:44 AM

பெங்களூருவிலிருந்து சொந்த மாநிலம் திரும்பிய காங். எம்எல்ஏக்கள்: குஜராத்தில் இன்று மாநிலங்களவை தேர்தல் - அகமது படேலுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு

குஜராத்தில் இன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் கட்சித் தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிடுகிறார்.

இதனிடையே, குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா, காங்கிரஸில் இருந்து விலகினார். அவரது ஆதரவாளர்களான 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் பல்வந்த் சிங் ராஜ்புத், பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டுள்ளார். 3 இடங்களுக்கு 4 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைத்திருந்தது கட்சி மேலிடம். இன்று தேர்தல் நடைபெற உள்ளதால், அவர்கள் அனைவரும் நேற்று காலை பெங்களூருவிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி நேற்று கூறும்போது, “அனைத்து எம்எல்ஏக்களும் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நிஜானந்த் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் வாக்களிப்பதற்காக காந்திநகருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்றார்.

குஜராத் சட்டப்பேரவையில் உள்ள 182 எம்எல்ஏக்களில் 57 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இதில் 6 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் உறுப்பினர்கள் எண்ணிக்கை 176 ஆக காங்கிரஸ் பலம் 51 ஆக குறைந்தது. இதன்படி ஒரு எம்பியின் வெற்றிக்கு 45 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.

பாஜகவுக்கு 121 எம்எல்ஏக்கள் இருப்பதால் 2 பேர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 3-வது வேட்பாளருக்கு 31 வாக்குகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 51 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 44 பேர் படேலுக்கு ஆதரவு அளிப்பார்கள். வெற்றிக்கு மேலும் ஒரு வாக்கு தேவை என்ற நிலையில், பெங்களூருவுக்கு செல்ல மறுத்த 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் (வகேலா ஆதரவாளர்கள்) சிலர் படேலுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

இதுதவிர, காங்கிரஸ் வேட்பாளர் படேலுக்கு ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் (2) கூறியுள்ளது. எனவே படேல் வெற்றி பெறுவது உறுதி. ஒரு உறுப்பினரைக் கொண்ட குஜராத் பரிவர்தன் கட்சி பாஜகவுக்கு ஆதரவளிக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x