Last Updated : 13 Nov, 2014 03:30 PM

 

Published : 13 Nov 2014 03:30 PM
Last Updated : 13 Nov 2014 03:30 PM

காஷ்மீர் போலி என்கவுன்டர் வழக்கில் 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

காஷ்மீரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த மச்சில் போலி என்கவுன்டரில் மூன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்கள் ராணுவ வீரர்களால் கடந்த 2010-ஆம் வருடம் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இளைஞர்கள் மீது கறுப்பு பெயின்ட்டை ஊற்றி அவர்களது உடல்கள் மீது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வீசி, வெளிநாட்டிலிருந்து ஊடுருவ முயன்ற பங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ வீரரகள் தங்களது அறிக்கையில் தெரிவித்தனர்.

இதனிடையே ராஃபியாபாதில் காணாமல் போன ஷேஷாத் அகமத், ரியாஸ் அகமத், முகமத் ஷபி ஆகிய 3 இளைஞர்கள்தான் வீரகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து இறந்த இளைஞர்களின் உறவினர்களின் கோரிக்கையை அடுத்து 11 ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

2010-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்திய போலி என்கவுண்டருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ராணுவத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது சி.ஆர்.பி.எப். மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் இந்த சம்பவம் தேசிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீதான இறுதி விசாரணையின் முடிவில் போலி என்கவுண்டர் செயலில் ஈடுப்பட்ட 7 ராணுவ வீரர்களூக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை வழங்கப்பட்டுள்ள 7 ராணுவ வீரர்களில் இருவர் உயர் ராணுவ அதிகாரிகள் ஆவர். மேலும், ராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த இந்த துயர சம்பவத்துக்கு காலம் கடந்த பின்னர் வரவேற்கத்தக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "காஷ்மீரில் உள்ள யாரும் நம்ப முடியாத ஒன்று நடந்துள்ளது. இது போன்ற வழக்குகளில் மிகவும் அரிதாக நீதி கிடைக்கின்றது.

மச்சில் சம்பவம் போலான போலி என்கவுண்டர் இனி நடக்கக் கூடாது. இந்த தீர்ப்பு இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருக்கட்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x