

பாவம் என்று கடவுளால் கருதப் படும் ஒரு செயலை மனிதன் இயற்றும் சட்டங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்? என்று முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்லாமியர் பின்பற்றும் முத்தலாக் நடைமுறையின் சட்ட அங்கீகாரம் குறித்து தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் இரண்டாம் நாளான நேற்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் ஆஜராகி வாதிடும்போது, ‘இந்த வழக்கில் முத்தலாக் நடை முறையின் சட்ட அந்தஸ்து மட்டு மின்றி, இதில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவது குறித்தும் விவாதிக்க வேண்டும்’ என்றார்.
அப்போது எந்தெந்த நாடுகளில் முத்தலாக் நடைமுறை அமலில் உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மொராக்கோ, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் விவாகரத்து பெற முத்தலாக் நடைமுறை அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியர் அல்லாத நாடுகளில் எந்தெந்த நாடுகளில் முத்தலாக் நடைமுறை உள்ளது, எங்கெல்லாம் இந்த நடைமுறை இல்லை என்ற பட்டியலை தயாரித்து வழங்குங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். முத்தலாக் பாவச் செயல் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், இந்த நடைமுறையை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், ‘பாவம் என்ற கடவுளால் கருதப்படும் ஒரு செயலை மனிதனின் சட்டத்தால் எப்படி நியாயப்படுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘முத்தலாக் நடைமுறையை பல்வேறு இஸ்லாமிய வழக்கங்கள் அனுமதித்தாலும், உலகிலேயே மோசமான, விரும்பத்தகாத நடைமுறையாக உள்ளது’ என்று கருத்து தெரிவித்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி, ‘முத்தலாக் விவாகரத்து உரிமை ஆண்களுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வில்லை. இது அரசியல் சாசன சட்டப்பிரிவு 14(சம உரிமை)-க்கு எதிரானது. ஒருசார்பான இந்த விவாகரத்து நடைமுறை மோச மானது; தவிர்க்கக்கூடியது. பாலின அடிப்படையில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை குரானின் வாசகங்களுக்கு எதிரானது. இத் தகைய பாவகரமான செயலை எவ்வளவு வாதிட்டாலும் நியாயப் படுத்த முடியாது’ என்றார். மற்றொரு மனுதாரரான ஷாயரா பானு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.
வெவ்வேறு மத நீதிபதிகள்
மத நடைமுறை ஒன்று சட்டப்படி செல்லுமா, செல்லாதா? என்ற கேள்வியுடன் நடத்தப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. இதில் தலைமை நீதிபதியாக உள்ள ஜே.எஸ்.கேஹர் சீக்கியர். நீதிபதி குரியன் ஜோசப் கிறிஸ்தவர், ஆர்.எப்.நாரிமன் பார்சி மதத்தைச் சேர்ந்தவர், யு.யு.லலித் இந்து மதத்தைச் சேர்ந்தவர், எஸ்.அப்துல் நசீர் இஸ்லாமியர். ஐந்து மதத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஒன்றாக விசாரித்து வருவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.