Published : 25 Aug 2017 03:57 PM
Last Updated : 25 Aug 2017 03:57 PM

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை என்னவென்பது வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் குர்மீத்.

இந்தத் தீர்ப்பு மற்றும் கைது நடவடிக்கை காரணமாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளில் போலீஸ் மற்றும் துணைராணுவப் படையினர் வன்முறைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், ஆசிரமத்திலுள்ள இரு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.

பெயரிடப்படாத ஒரு கடிதத்தில் தொடங்கியது இந்த வழக்கின் விதை. அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் அதை எழுதிய சந்யாசினி கூறியது இதுதான். இவரைத் தனது அறைக்கு வருமாறு குர்மீத் ராம் ரஹீம் சிங் கூறினாராம். அங்கு சென்றபோது பாபா படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகே ஒரு ரிவால்வர் இருந்தது. அப்போது தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார் சந்யாசினி. அதற்குப் பின் மூன்று வருடங்களுக்கு மிரட்டலுடன் பாலியல் பலாத்காரம் தொடர்ந்ததாகவும், இந்த அநீதி தன்னைப்போல் மேலும் 35 பெண்களுக்கு நடைபெற்றது என்றும் சொல்லியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சில மாதங்களில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடிதம் அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் இவர் இருந்திருப்பார் என்ற செய்தி பரவ... பரபரப்பு கூடியது.

மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு நடத்தத் தீர்மானித்தது. இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. டி.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகியிருந்த 18 சந்யாசினிகளை விசாரித்தது சிபிஐ. அவர்களில் இருவர் தாங்களும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினர். ஆசிரமத்தில் நடக்கும் சட்டமீறலான விஷயங்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஓட்டுநராகப் பணியாற்றிய கட்டா சிங் என்பவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சாட்சியம் கொடுத்தார்.

தீர்ப்பின் எதிரொலி காரணமாக வன்முறை வெடிக்கலாம் என்ற காரணத்தினால் ஹரியாணாவில் பல இடங்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக சண்டிகரிலுள்ள அத்தனை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை. தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் வளாகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கற்களும் கூரிய ஆயுதங்களும் அதன் மற்றொரு பகுதியில் நிரப்பப்பட்டுள்ளன. சண்டிகர் காவல்துறை அந்த நகரின் அத்தனை நுழைவிடங்களையும் ‘சீல்’ செய்துள்ளது. ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் ராம் ரஹிம் சிங் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் ரோத்தக் கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. இங்குள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி ஓய்வு இல்லம் சிறப்புச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலாவில் நிலைமை பதற்றமாக உள்ளது காரணம், தேரா சச்சா ஆதரவாளர்கள் ஏற்கெனவே வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x