Last Updated : 04 Aug, 2017 10:02 AM

 

Published : 04 Aug 2017 10:02 AM
Last Updated : 04 Aug 2017 10:02 AM

மோடியின் கடிதம் இதயத்தை தொட்டது: ட்விட்டரில் பகிர்ந்தார் பிரணாப் முகர்ஜி

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தனக்கு தந்தையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்றார். கடந்த 2014 மே மாதம் மோடி பிரதமராக பொறுப்பேற்றார். இருவரும் 3 ஆண்டுகள் இணைந்து பணியாற்றினர்.

இந்நிலையில், பிரணாப்பின் பதவிக் காலம் கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அன்றைய தினம் பிரணாப்புக்கு பிரதமர் மோடி உருக்கமாக ஒரு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரணாப் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து நான் ஓய்வுபெற்ற நாளில் பிரதமர் மோடி எனக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். என் இதயத்தைத் தொட்ட அந்தக் கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரணாப்ஜி நான் உங்களுடன் பணியாற்றிய காலத்தை எப்போதும் நினைவுகூர்ந்து கொண்டே இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷா நேற்று கூறும்போது, “பிரணாப்பை புகழ்ந்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தைப் படித்தேன். வரும் காலத்தில் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் எப்படி மதிப்பளிக்க வேண்டும் என்பதற்கு இது உதாரணமாக அமையும்” என்றார்.

பிரதமர் மோடியின் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

குஜராத்தில் இருந்து டெல்லிக்கு (பிரதமராக) வந்தபோது என் முன் இருந்த பணி மிகவும் பெரியதாகவும் சவாலானதாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் எப்போதும் எனக்கு தாங்கள் தந்தையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினீர்கள்.

உங்களது அறிவு வலிமை எனக்கு பேருதவியாக இருந்தது. என் மீது அன்பும் அக்கறையும் செலுத்தினீர்கள். நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பயணம் செய்து நான் சோர்வடைந்து இருந்தாலும், என்னை தொலைபேசியில் அழைத்து, ‘உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூறினீர்கள் . அது எனக்கு மிகப்பெரிய ஆற்றலை வழங்கியது.

நம் இருவரின் அரசியல் பயணமும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் மூலம் தொடங்கின. இரு கட்சிகளின் சித்தாந்தங்களும் அனுபவமும் வெவ்வேறானவை. என்னுடைய மாநிலத்தில் மட்டுமே எனக்கு நிர்வாக அனுபவம் இருந்தது. ஆனால், பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் நீங்கள் வலம் வந்தீர்கள். இதன்மூலம் நிறைய அனுபவங்கள் உங்களுக்கு உண்டு. அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள். உங்களுடன் பணி புரிந்ததை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தனது கடிதத்தில் எழுதி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x