Last Updated : 16 Aug, 2017 04:54 PM

 

Published : 16 Aug 2017 04:54 PM
Last Updated : 16 Aug 2017 04:54 PM

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவுக்கு அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளார். இனி இந்த அவசரச் சட்ட மசோதாவானது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்த முயற்சி காரணமாக, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தது. இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட் மதிப்பெண் அடைப்படையில் நடந்தது.

நிர்மலா சீதாராமன் காட்டிய பச்சைக் கொடி..

இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு தர மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதையடுத்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட மசோதாவை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத் திடம் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) சமர்ப்பித்தார்.

இந்நிலையில், நீட் தேர்வுகளில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசரச் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் கிடைத்துள்ளது. விரைவில் நீட் தேர்வு அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) விதிகளின்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 31-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x