தீபாவளி தீ விபத்துகள்: வட மாநிலங்களில் 23 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப்படம்

பிரதிநிதித்துவப்படம்

Updated on: 
2 min read

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட தீ விபத்துகளில் ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 23 பேர் உயிரிழந்தனர். இதில் மத்தியப் பிரதேசத்தில் 13 பேரும், மகாராஷ்டிரத்தில் 6 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட் டநிலையில், அந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தீ விபத்துகள் குறித்த அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பட்டாசு வெடிக்கும்போது கிளம்பிய தீப்பொறிகள் மற்றும் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்துகள், பல குடும்பங்களின் மகிழ்ச்சியைத் துயரமாக மாற்றியுள்ளன. பல்வேறு மாநிலங்களின் நடந்த இந்த விபத்துகளில் மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர், மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்தவும், மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் தீவிரமாகப் பணியாற்றினர். இவ்வாறான தீ விபத்துக்களின் தாக்கம், மத்தியப் பிரதேசத்தில் மிகக் கடுமையாக இருந்தது. அங்குள்ள இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர். கட்னி மாவட்டத்தில் குடியிருப்பு வீடு ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இரண்டு மாதக் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 6 பேர் மூச்சுத் திணறியும், தீயில் கருகியும் உயிரிழந்தனர்.

அதேபோல், சியோனி மாவட்டத்தில் தங்க வியாபாரி ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள், மூன்று பேர் ஆண்கள், நான்கு குழந்தைகள்.

உஜ்ஜைனின் நாக்ஜிரி பகுதியில், தீபாவளி இரவில் இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்றில் தீப்பிடித்தது. இதில் மேல்தளத்தில் சிக்கிக்கொண்ட குடும்ப உறுப்பினர்களில் 107 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிராவிலும் பயங்கரமான தீ விபத்துகள் நிகழ்ந்தன. தாராஷிவ் மாவட்டத்தில், மளிகைக் கடைக்கு மேல் இருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

புனேவில் ஒரே இரவில் 63 இடங்களில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. மும்பையின் லோகண்ட்வாலாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இத்துடன், டோங்க்ரி பகுதியில் குடிசை வீடுகளும் கடைகளும் தீயில் எரிந்து சாம்பலாகின. இது தவிர, நாக்பூரில் உள்ள டிவிஎஸ் ஷோரூமில் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

தானேவில் 17 அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலும் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அங்கு உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் பட்டாசுக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவரைக் காணவில்லை. தீப்பிழம்புகள் அருகிலிருந்த மூன்று கடைகளையும், பல இருசக்கர வாகனங்களையும் முழுமையாக எரித்துச் சாம்பலாக்கின.

தலைநகர் டெல்லியின் நரேலா பகுதியில் பட்டாசு வெடிக்கும்போது ஏவப்பட்ட ராக்கெட் வகை பட்டாசு ஒன்று 10 வயது சிறுவனின் வயிற்றில் நேரடியாக பட்டது. இதில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 20 முதல் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

காசியாபாத்தின் கிராஸிங்ஸ் ரிபப்ளிக் பகுதியிலும் தீ விபத்துகள் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன. நாட்டின் பிற பகுதிகளிலும் தீ விபத்துகளால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஜம்முவின் நேரு சந்தையில் 12-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து அழிந்தன. அசாமின் ஜோனாய் மற்றும் சிக்கிமின் கேங்டாக் ஆகிய இடங்களிலும் தீ விபத்துகள் ஏற்பட்டன. அங்கு தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப்படம்</p></div>
‘பாட்டாசு வெடிப்பதன் நன்மை யாதெனில்...’ - மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து

X