

ஆந்திர மாநிலம் வேட்லபாளையம் பகுதியில் நேற்று பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பட்டாசு தயாரிப்பு பணி நடந்து வந்த கூடம் உருக்குலைந்தது. தீயணைப்பு படையினர் தீவிரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சாமர்லகோட்டா பகுதியில் ஊருக்கு வெளியே வேட்லபாளையம் எனும் பகுதியில் சூர்யஸ்ரீ என்ற பெயரில் வீரய்யா என்பவர் 6 ஷெட்கள் அமைத்து பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார்.இங்கு ஷிப்ட் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.
நேற்று காலை ஷிப்டில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்து, வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர். இங்கு தீபாவளிக்கு மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் பட்டாசு தயாரிப்பு நடந்து வந்துள்ளது. அதாவது அரசியல் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழா, துக்க நிகழ்ச்சிகள், மற்றும் பல கொண்டாட்டங்களுக்கு இங்கிருந்து தான் அப்பகுதி மக்கள் பட்டாசு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு ஆண்கள், பெண்கள் என பலர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் இந்த பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்தது. இந்த கோர விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் நிவாஸ் என்பவரின் தந்தை வீரய்யா உட்பட 23 பேர் உயிரிழந்தனர். பலரது உடல் பாகங்கள் சுமார் ஒரு கி.மீ தூரம் வரை விவசாய நிலங்களில் சிதறிக் கிடந்தன. வெடி சத்தம் சுமார் 5 கி.மீ. தூரம் வரை கேட்டுள்ளது.
காக்கிநாடாவில் இருந்து போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, உடல்களை அடையாளம் காணமுடியாமல் கதறி அழுதனர்.
படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 11 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தகவல் அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடனடியாக சில அமைச்சர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி, விசாரணை நடத்தஉத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விஜயநகரம் சுற்றுப்பயணத்தில் இருந்த சந்திரபாபு நாயுடு அங்கிருந்து நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் காக்கிநாடாவுக்கு வந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.