

உத்தரபிரதேச மாநிலத்தில் 33 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜோடி, குடும்பத்தாரின் விருப்பத்தை ஏற்று முறைப்படி திருமணம் செய்து கொண்டது.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் மிதாலி. இங்கு வசிப்பவர்கள் நோகிலால் மவுரியா (76), ரமாதேவி (70). இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குத் திருமணம் நடந்து குழந்தைகளும் உள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “கடந்த 1984-ம் ஆண்டு சீதாபூர் கிராமத்தில் இருந்து ரமாதேவியை நோகிலால் அழைத்து வந்தார். அப்போதிலிருந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்” என்றனர்.
இந்நிலையில், நோகிலாலும் ரமாதேவியும் முறைப்படி திரு மணம் செய்துகொள்ள வேண் டும் என்று மகள்களும் உறவினர் களும் வலியுறுத்தினர். அதை இருவரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் நேற்று முன்தினம் மாலை துர்கா கோயிலில் திருமணம் நடந்தது.
மணக்கோலத்தில் வந்த நோகிலால் - ரமாதேவி ஜோடிக்கு கிராம பூசாரி திருமணத்தை நடத்தி வைத்தார். ரமாதேவிக்கு தாலி கட்டினார் நோகிலால். இந்த நிகழ்ச்சியில் மகள்கள், பேரக்குழந்தைகள், கிராம மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நோகிலால் கூறும்போது, “ரமாதேவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை சமூகம் ஏற்றுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என்று நானும் ஆசைப்பட்டேன்” என்றார்.
இதேபோல் மத்தியபிரதேச மாநிலத்தில் 50 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த சுகே குஷ்வகா (80) - ஹரியா (75) ஜோடியும் கடந்த வாரம் முறைப்படி திருமணம் செய்து கொண்டது. இறப்புக்குப் பிறகு மோட்சமடைய வேண்டும் என்கிற ஆசையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.